சங்கர்புரத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கர்புரத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட உரச் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும் கௌரவ அதிதிகளாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத்  மட்டக்களப்பு மாவட்ட உரச் செயலகத்தின் உதவி பணிப்பாளர் திரு.சிறாஜுடீன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி  உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் மண்டூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் போரதீவுப்பற்று  பிரதேச சபையின் உறுப்பினர்கள் விவசாய போதனாசிரியர் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது விவசாய செய்கையில் பிரதானமாக நெற்செய்கையில் பசளைப் பாவனை பற்றியும் களை நெல் முகைமைத்துவம் கபில நிறத்தத்தியின் தாக்கம் பற்றியும் தெளிவான விளக்கமூட்டல்கள் விவசாயிகளுக்கு விவசாய போதனாசிரியரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேடமாக பொதுமக்களின் சமூக மட்ட பிரச்சினைகள் அவர்களிடம் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்கள் வழங்கினார்.
 
இதன்போது விவசாயிகளின் நீர் பிரச்சினை வெள்ளத்தினாலும் ஏனைய காரணங்களாலும் சேதமடைந்த வீதிகள் பாலங்கள் என்பவற்றின் திருத்தப் பணிகள் சங்கர்புரம் பாடசாலைக்கான கட்டட வளங்கள் மேலும் பிரதானமாக அனுமதியற்ற மண் அகழ்வினால் பெருமளவான வயல் நிலங்களின் பாதிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகள் பொதுமக்களால் நேரடியாக முன்வைக்கப்பட்டு அவை தொடர்பிலான முன்னெடுப்புக்கள் பற்றி அரசாங்க அதிபர் தனித்தனியே விளக்கமளித்ததுடன் மண் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் உறுதியளித்தார்
Share this...
Share on Facebook
Facebook

Related posts