பஸ் நிலையம் கல்முனை மாநகர சபைக்கே சொந்தமானதாகும். இங்கு பஸ்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது : கல்முனை மாநகர முதல்வர்.

கல்முனை மாநகர பிரதான பஸ் நிலையத்தில் போக்குவரத்து சபை பேருந்து  மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களிடையே இன்று (03) பகல் ஏற்பட்ட முறுகல் நிலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் சமரசத்தினால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களை போன்று கல்முனை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் தரித்து நிற்பதற்கு இடமளிக்க மறுத்து, இ.போ.ச.பஸ் நடத்துனர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து இரு தரப்பினரிடையேயும் உருவான முரண்பாடு காரணமாக அங்கு அவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
 
இந்த சர்ச்சை குறித்து கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி  ஏ.எம்.றகீப்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, முதல்வர், தனியார் பஸ்களை தரித்து வைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி, ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.
 
இதன் பிரகாரம் குறித்த பஸ் நிலையத்தின் பின் பகுதி, தென் பகுதி ஓரம், தீயணைப்பு பிரிவு சுற்று வட்டாரம் போன்ற பகுதிகள் தனியார் பஸ்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பஸ் நிலையத்தின் முன் பகுதி வட-கிழக்கு மூலையில் பயண நேரத்திற்கு புறப்படத் தயாராகும் இரு தரப்பு பஸ்களையும் தரித்து வைப்பதற்கு இடமளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தினார்.
 
“இந்த பஸ் நிலையம் கல்முனை மாநகர சபைக்கே சொந்தமானதாகும். இங்கு தனியார் பஸ்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கு இ.போ.ச. தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற இரு தரப்பு பஸ்களுக்கும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தும் உரிமை இருக்கிறது” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
பயணிகளின் நலன் கருதி கல்முனை பஸ் நிலையத்தை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளுக்கு இரு தரப்பினரும் மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் மாநகர முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
 
தனியார் பஸ்களுக்கு கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் தற்போது போதிய இடங்கள் ஒதுக்கித் தரப்பட்டிருப்பதனால் இனிவரும் காலங்களில் பொலிஸ் நிலைய வீதி நெடுகிலும் தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பணிப்புரை விடுத்த மாநகர முதல்வர், இந்த ஒழுங்கு விதியை மீறுவோர் மீது அபராதம் விதிக்குமாறு பொலிஸாரை அறிவுறுத்தினார்.
 
அதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு பஸ் நிலையத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதியில் இடமொதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ஒழுங்கு விதிகளுக்கேற்ப அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து, வழிநடாத்தும் பணியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts