அடுத்த 24 மணித்தியால வானிலை அறிவித்தல் ! சூறாவளி – ரைற்லி

வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த தாழமுக்கமானது   இன்று (09.10.2018) பகல் சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதனால் இதற்கு பாகிஸ்தான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட ரைற்லி   எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 950 கி.மீற்றர் தூரத்திலும் ஒரிஷா மாநிலத்தின்  கோபால்பூர்  பிரதேசத்திலிருந்து தென்கிழக்காக 530 கி.மீற்றர் தூரத்திலும் ஆந்திர பிரதேசத்தின் கலிங்கப்பட்டணத்திலிருந்து  கிழக்கு தென்கிழக்காக 480 கி.மீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணித்தியாலத்தில் வலுவான சூறாவளியாக (Severe Cyclone) மேலும் வலுவடைந்து சில மணித்தியாலங்கள் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, பின்னர் ஒரிஷா மாநிலத்தையும்; வட ஆந்திர பிரதேசத்தையும் நோக்கி வடமேற்குத் திசையில் மேலும் நகர்ந்து, எதிர்வரும் 11ம் திகதி காலைவேளை  கோபகுல்பூரிற்கும் கலிங்கபட்டணத்திற்கம் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தினால் இலங்கையின் மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீற்றர் வேகத்தில் இடையிடையே சற்றுப்பாலமான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, மன்னார்  மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படுவதுடன் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.
சில பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு, மத்திய, சப்ரகமுவ ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மி.மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான பதிவுசெய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றானது பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பிராந்தியங்களைப் பொறுத்தவரை இலங்கைத் தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கி.மீற்றர் முதல் 40 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்கு அல்லது மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். இந்தக் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் புத்தளம் முதல் கொழும்பு, அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்தக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் கடலானது கொந்தளிப்பாகக் காணப்படும்.

க.சூரியகுமாரன், வளிமண்டலவியல் திணைக்களம்.

Related posts