அபிவிருத்திகளை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்… (கல்முனை மாநகரசபை உறுப்பினர் – ச.இராஜன்)

எமது உரிமைசார் போராட்டங்களை எம்மினத்தைச் சார்ந்த ஒருசிலரே கொச்சைப்படுத்திப் பேசுவதென்பது மிகவும் மனவேதனையான விடயம். நீங்கள் அபிவிருத்திக்காக வந்திருக்கலாம். உங்கள் அபிவிருத்தியை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இந்த நாட்டிலே தமிழினம் என்ற ஒன்று இல்லாமல் போகின்ற போது எமது மக்கள் எப்படி அபிவிருத்தியை அனுபவிப்பது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் இரவு வருகை தந்து தமது ஆதரவினை வழங்கியபோது ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவினை நல்கும் பொருட்டு நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்திருக்கின்றோம். எமது இனத்தின் விடுதலைக்காக நர்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் எந்த இனத்தையோ, மதத்தையோ சாடவில்லை, எந்த நாட்டையும் நாங்கள் கேட்கவில்லை. எங்கள் மக்களின் விடிவு, எமது மக்கள் நிரந்தரமா, சந்தோசமாக இந்த நாட்டின் ஒரு பிரஜையாக வாழ்வதற்கான தீர்வையே நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

இன்று இந்த நாட்டிலே காணி ஆக்கிரமிப்பு, ஆலயங்களை உடைத்து புத்த பெருமானை நிறுவுதல், மேய்ச்சற்தரைக் காணிகளை அபகரித்தல் போன்ற விடயங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்களை நிறுத்துங்கள் இந்த நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று தான் நாங்கள் போராடினோம். எமது ஆயுதப் போராட்டமும் இதனை நோக்காகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு கூட எமது மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஆசைப்பட்டு தற்போது எமது மக்கள் கனிசமான வாக்களித்து சிங்கள அரசு சார்ந்த பிரதிநிதிகளைக் கூடத் தெரிவு செய்திருக்கின்றார்கள். அவ்வாறு எமது மக்கள் தெரிவு செய்திருந்தாலும், அதன் மூலம் எந்தவிதமான விடிவும் இல்லாமலேயே எமது மக்கள் ஏங்கித் தவிக்கின்றார்கள்.

எமது நாட்டிலே வாழும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நீதியாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே இன்று லண்டனிலே தனது உயிரைத் துச்சாமக நினைத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இருக்கின்ற அந்த அம்மையாரை நினைத்து நாங்கள் பெருமை அடைகின்றோம். எங்கள் திலீபன் அண்ணன், அன்னை பூபதியம்மா வரிசையிலே இன்று அவர் அந்தப் போராட்டத்தை அனுஸ்டித்துக் கொண்டிருக்கின்றார்.

எமது இனத்தின் விடிவுக்காக நாங்கள் எவ்வாறெல்லாம் போராட்டங்களை நடத்த முடியுமோ அவ்வாறெல்லாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தப் போராட்டங்களையெல்லாம் இந்த நாட்டிலே வாழுகின்ற எம்மினத்தைச் சார்ந்த ஒருசிலரே கொச்சைப்படுத்திப் பேசுவதென்பது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது. நீங்கள் அபிவிருத்தியைச் செய்வதற்கு வந்திருக்காலம். நீங்கள் அந்த அபிவிருத்தியைச் செய்யுங்கள். உங்கள் அபிவிருத்தி எமது மக்களுக்குச் சரியான முறையில் வந்து சேர வேண்டும். அந்த அபிவிருத்தியை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அவர்கள் இந்த இடத்திலே இருப்பதற்கான இருப்புத் தக்க வைக்கப்படல் வேண்டும். மக்களுக்கான சொந்த இருப்பு இல்லா பட்சத்தில் எந்த வீதியோ, கட்டிடமோ, வீடுகளையோ அனுபவிக்க முடியாது. இந்த நாட்டிலே தமிழினம் என்ற ஒன்று இல்லாமல் போகின்ற போது எமது மக்கள் எப்படி அபிவிருத்தியை அனுபவிப்பது என்பது பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் எவரையும் குறைகூறவில்லை. நீங்கள் அபிவிருத்தியை நோக்கி நிற்பவர்கள் அங்கேயே நில்லுங்கள். நாங்கள் எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். எங்களை நீங்கள் விமர்சனம் செய்வதை நிறுத்தி சரியான முறையில் அபிவிருத்தியை மேற்கொள்வதைப் பாருங்கள். எமது போராட்டங்கள் வெற்றியளிக்கும் வரையில் நாங்கள் எமது மக்களுக்காகப் போராடிக் கொண்டேயிருப்போம்.

எனவே இந்த அரசாங்கம் ஒன்றை நினைக்க வேண்டும். இது சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது எமது உரிமைக்கான அகிம்சை வழிப் போராட்டம். இது எமது இனத்தின் விடிவுக்கான போராட்டமே தவிர எவருக்கும் எதிராகன போராட்டமல்ல என்று தெரிவித்தார்

Related posts