அம்பாறை மாவட்டத்தில் மீனவத் தொழில் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் காற்றுடனான காலநிலை காரணமாக இம்மாவட்டத்தின் கடற்றொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
அம்பாறை மாவட்டத்தின் கடையோரப் பிரதேசங்கள் மற்றும் கடற்பரப்பு போன்றவற்றில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
கடற்றொழிலை மாத்திரம் நம்பி தமது வாழ்வாதாரத்தினைக் நகர்த்திச் செல்லும் மீனர்வகள் கடந்த சில வாரங்களாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் உள்ளனர். இதனால் தொழில் இம்மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள் தொழில் வாய்ப்பற்று காணப்படுகின்றனர். காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இவர்களது தொழில்வாய்ப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளது. 
 
கடற் பிராந்தியத்தில் பலமாக வீசும் காற்றின் காரணமாக அலைகளின் வேகமானது வீரியத்துடன் எழுவதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மாலை வேளைகளில் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக சில பிரதேசங்களில் கடல் அலை சுமார் பத்தடிக்கு மேல் உயர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோப் பிரதேசங்களில் நிலவும் காற்றுடனான காலநிலை காரணமாக இம்மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடந்த காலங்களைப் போல் சிறப்புற தமது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் இம்மாவட்டத்தின் மீனின் விலை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
 
கடற்கொந்தளிப்புடன் காணப்படுவதனால், கடற்றொழில் நிமித்தம் கடலுக்குச் செல்லும் படகுகள், வள்ளங்கள் மற்றும் கடற்றொழில்சார் உபகரணங்கள் கடலலையில் அள்ளுண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தமது கடற்றொழில் உபகரணங்கள் பாரியளவில் சிதைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், கடற்கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று போன்றவற்றின் காரணமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு போதிய மீன்கள் அகப்படுவதில்லை எனவும், இதனால் பெருந்தொகைப் பணம் தினமும் நஷ்டமடைவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
கடற்பரப்பிலும், கடற்கரையினை அண்டிய பகுதிகளிலும் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக கரையோரப் பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டிருந்த சில வள்ளங்களும், படகுகளும் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கடற்றொழிலில் ஈடுபட்ட சில மீனவர்களின் படகுகள் அலையின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளதனால் கடற்றொழில் உபகரணங்கள் மிகுந்த சேதத்திற்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts