அம்பிளாந்துறையில் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஊரில் பட்டிப்பொங்கல் விழா அம்பிளாந்துறை திசை காட்டி மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. தமிழர்களுடைய பாரம்பரிய மரபுக்கலைகளில் ஒன்றான மாட்டுப்பொங்கல் என அழைக்கப்படும் பட்டிப்பொங்கல் விழா மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
எதிர்வரும் தைப்பொங்கலுக்கு மறுநாளான 16/01/2020, வியாழக்கிழமை பி.ப:2, மணிக்கு அம்பிளாந்துறை நிழல்வாகை மரத்தடி முற்றத்தில் அம்பிளாந்துறை திசைகாட்டிமையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பு.புவனகாந் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் கிராமிய பாரம்பரிய கோமாதா பூசையுடன் ஊர் கலைநிகழ்வுகளும், மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்ற கலைஞர்களின் சிந்தனையுடன் சிரிப்பூட்டும் பட்டிமன்றம் “சந்தோஷமான பண்டிகை இந்த காலமா? அந்தக்காலமா?எனும் தலைப்பில் இடம்பெறுவதுடன் , தமிழர் வாழ்வியலுடன் ஒன்றிணைந்த பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
 
அந்த நிகழ்வை மேலும் மெருகூட்டும் வண்ணம் அம்பிளாந்துறை ஊரின் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
 
தமிழர் வரலாற்று பண்பாட்டு நிகழ்வுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது பட்டிப் பொங்கல் ஆகும். இப் பட்டிப்பொங்கலானது தைத்திருநாள் தினத்தை அடுத்துவரும் நாளில் வெகுவிமர்சையாக தமிழர்களால் குறிப்பாக விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. விவசாயச் செய்கைக்கு பலநிலைகளில் பெரும் ஆதரவு நல்கும் மாடுகளை கௌரவிக்கும் முகமாகவும் நன்றி செலுத்தும் முகமாகவும் அவைகளைக் கடவுள் என்ற இஸ்தானத்தில் வைத்து இப் பட்டிப்பொங்கலானது கொண்டாடப்படுகிறது. இருந்தபோதிலும் இப்பாரம்பரிய முறைகளும் அதனோடு தொடர்புபட்ட கலைச்சொல்வளங்களும் இன்றைய சூழலில் அருகிவருவதும் நம் கவனத்திற்குட்படாததாக இருப்பதும் சிந்தனைக்குரியதாகின்றது. வேளாண்மைச் செய்கையோடு பயன்படுத்தப்பட்ட அதிகளவான கலைச்சொற்கள் தற்காலத்தில் பெரிதும்  பயன்படுத்தப்படாதநிலையில் உள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
 
இதேவேளை கடந்த பண்டைக்காலம் தொட்டு நடைமுறையில் பேணப்பட்ட தமிழ்பாராம்பரிய ஊஞ்சல் விழாவை மீண்டும் புத்துயிர் ஊட்டி ஒவ்வொரு சித்திரைபுத்தாண்டு தினத்திலும் கடந்த 2011,ம் ஆண்டு தொடக்கம் அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு கழகம் தொடர்ச்சியாக ஊஞ்சல் விழாவை அம்பிளாந்துறை நிழல்வாகை மரத்தடி முற்றத்தில் முன் எடுத்துவருவதுபோன்று இவ வருடம் தொடக்கம் அம்பிளாந்துறை திசைகாட்டிமையத்தால் வருடாவருடம் பட்டிபொங்கல் விழா மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் என அம்பிளாந்துறை திசைகாட்டி மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related posts