அரசியல் உரிமை ,மக்களின் பாதுகாப்பு,மற்றும் கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி ஆர்வமாகவுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி,அரசியல் உரிமை, மக்களின் பாதுகாப்பு ,மற்றும் கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வமாகவுள்ளார்.அதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.எனவே அரசியல்,கட்சி பேதமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவரும் பகமையை மறந்து ஒன்றுபட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஜீ.ஹரிதரன்  அவரது அலுவலுகத்தில் வெள்ளிக்கிழமை(15)மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:-நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மாத்திரமே தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.ஜனாதிபதி கவனம் செலுத்துவது போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்த வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் (ஒரு வருடம் கடந்த பின்னரும்) நடாத்தப்படாமை ஒரு ஜனநாயக உரிமை மீறலாகும். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளும் இந்த மாகாண சபைத் தேர்தலை நடாத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் வரை செல்வார்கள். இதுவொரு ஜனநாயக உரிமை மீறலென அவர்களுக்கு தெரியாதா.? இருப்பினும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென ஜனாதிபதி மாத்திரமே தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

கிழக்கு மாகாணத்தின் சிவில் அமைப்புக்கள்,இளைஞர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டு மென்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே இத்  தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்மூலம் நிருவாக கட்டமைப்பை உருவாக்கி படித்த இளைஞர்,யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களையும்,பட்டதாரிகளின் பிரச்சனைக்கான தீர்வுகளையும்,பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரப்பிரச்சனை,பொதுமக்களின் பிரச்சனைகள்,தேவைகள்,எதிர்பார்ப்பு,அபிவிருத்தி என்பனவற்றையும் செய்யமுடியும்.

கடந்த யுத்தத்தினால் நலிவுற்ற மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுகின்றார்.அதேபோன்று நாட்டிலே வளமான,வலுவான சமூகத்தை உருவாக்க வேண்டுமென அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.குறிப்பாக போதையற்ற நாட்டை கட்டியெழுப்பி இலஞ்சம்,ஊழல்,மதவாதம்,இனவாதம் இல்லாமல் இனநல்லிணக்கத்துடன் அனைவரும் இந்தநாட்டின் பிள்ளைகள் போன்று செயற்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றார்.இதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.தற்போதைய ஜனாதிபதியின் சிந்தனையை நாம் சிறப்பாக முன்னெடுப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி,அரசியல் உரிமை, மக்களின் பாதுகாப்பு ,மற்றும் கிராம மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி ஆர்வமாகவுள்ளார்.அதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எடுக்கவுள்ளார். எனவே அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Related posts