ஆணழகன் போட்டியில் வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான மாதவன்

ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனான மாதவன் ராஜ்குமாருக்கு இன்றைய தினம் மலையகத்தில் பாராட்டு விழாவொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மாதவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை வழங்கி வைத்துள்ளார்.

சீனாவில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த நுவரெலியா மாவட்டத்தின் லபுக்கலை கொண்டகலை பிரிவிலுள்ள தோட்டத்தில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

போட்டியில் கலந்துகொள்ள சீனா செல்வதற்கு விமானப் பயணச் சீட்டுக்கான பணத்தையே திரட்டிக்கொள்ள முடியாது இருந்த நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் உட்பட மேலும் சிலவர் முன்வந்து வழங்கிய உதவிகளை அடுத்து அங்கு சென்று வெண்கலப் பதக்கத்தை வென்று நாடு திரும்பிய மாதவன் ராஜ்குமாருக்கு பாராட்டும் வகையில் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை – இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசஸ் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஆசிய அளவில் ஆண் அழகன் என்று நிரூபித்துள்ள மாதவன் ராஜ்குமாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வழங்கி வைத்தார்.

அத்துடன் டுபாயில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள ராஜ்குமாருக்கு விமான பயணசீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts