இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துக: சி.வி. விக்னேஷ்வரன்

வடக்கில் 60,000 ஏக்கர் காணியில் இராணுவம் நிலைகொண்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் வசம் இருந்த 92 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் அப்பட்டமான பொய் என முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தாம் பதவியேற்கும் போது 65,000 ஏக்கர் காணியை படையினர் கையகப்படுத்தியிருந்ததாகவும் தற்போது 60,000 ஏக்கர் காணி படையினர் வசமுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தின் வேலை தற்போது முடிவடைந்துள்ளமையினால், அவர்கள் கொழும்பு செல்வதே முறையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால், இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து ஒன்பதில் ஒரு பங்கை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வௌியேறுவதில்லை என கூறினாலும், இந்திய அமைதி காக்கும் படையணிக்கு வாபஸ் பெற வேண்டி ஏற்பட்டதைப் போன்று தருணம் வரும் எனவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts