இளமையிலே இலக்கிய உலகில் கால்பதிக்கும் வேப்பையடி கலைமகள் ம.வி.மாணவி

(சா.நடனசபேசன்)
 
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்மகா வித்தியாலய மாணவி மதிவண்ணன் முகர்ணியா அவர்கள்  கலாசார திணைக்களமும் அம்பாரை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கியப்போட்டியில் கொரணா வைரசும் சகவாழ்வும் கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளதுடன் இளம் படைப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்
 
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் இயற்கை எழில் நிறைந்த வேப்பையடி எனும் கிராமத்தில் வசித்து வரும் முகர்ணியா மதிவண்ணன் ஓர் இளம் படைப்பாளர். தற்பொழுது தரம் 12 இல் கல்வி கற்கும் இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் தற்போது உயர்தரம் வரை வேப்பையடி  கலைமகள் மகா வித்தியாலயத்தில்  கல்வி கற்று வருகிறார். ஆறாம் தரத்தில்  கற்கும் பொழுதே இவருக்கு கலை மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. கலைத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் அன்று முதல் இன்றுவரை பாடசாலையில் நடைபெறும் அனைத்து வித போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறார். குறிப்பாக தமிழ்த் தினப் போட்டிகள், விவாதப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் கலாசாரப் போட்டிகளில் முன்னிற்கும் இவருக்கு   எழுத்தாக்கத்தின் மீதே அதிக ஈடுபாடு உள்ளது.
 
அதனால் கட்டுரையாக்க    போட்டிகளில் பங்கு பற்றி தன்னை  வளப்படுத்திக் கொண்டு வரும் இவர் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய போட்டி தொடரில் “கொரோனா வைரசும் சக வாழ்வும்” எனும் தலைப்பினாலான கட்டுரை ஒன்றை முன்வைத்து அப்போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து நடாத்தப்பட்ட மாவட்ட இலக்கிய போட்டி தொடரில் அதே தலைப்பினாலான  கட்டுரை போட்டியில் மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார். பாடசாலையில் பல போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றியீட்டி பல சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணம் களையும் பெற்ற போதிலும் பாடசாலை தாண்டி சமூக மட்டத்தில் இதுவே இவரது முதல் வெற்றி கனியாக இருந்தது.  அந்த மகிழ்ச்சி இன்னும் பல படைப்புகளை கொடுக்க பெரும் ஊக்குவிப்பாக இருந்தது.
 
கொரோனா தாண்டவத்தால் பாடசாலைகள் மூடப்பட இணைய வகுப்புக்களில் பங்கெடுத்த இவர் வீட்டில் ஓய்வாக உள்ள போதெல்லாம் தனக்கு பிடித்த எழுத்து துறையை இவரது துணையாக்கினார். பொதுவெளிகளில் நடைபெறும் இலக்கிய துறை சார்ந்த போட்டிகளில் எல்லாம் ஆர்வத்தோடு பங்கெடுத்த முகர்ணியா தன்னை இன்னுமின்னும் இலக்கிவோட்டத்தில் பங்கெடுக்கும் படைப்பாளியாக மாற்ற கடுமையான பிரயத்தனம் எடுத்து வருகிறார். பாடசாலையில் ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பினாலும், பெற்றோரின் வழிகாட்டல் மற்றும் உதவியினாலும், தனது விடா முயற்சியினாலும் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கும் இளம் முயற்சியாளர் இவர்.இவரது திறமையினை பாடசாலையின் அதிபர் நா.பிரபாகர் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அப்பிரதேச பொது அமைப்புக்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்
 
 

Related posts