‘எமக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்’

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையே நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி,

“நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம். எமது மக்களுடைய விடயங்களில் அரசாங்க நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே நகர்கின்றன.

“அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுதபலம். மற்றையது எமது மக்களின் வாக்குப்பலம். அவற்றில் ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்.

“எனவே, தற்போது எம்மிடம் உள்ள மக்களின் ஜனநாயக பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.

“எமது தேசத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்தால் யுத்தத்துக்கு பின், யுத்தத்துக்கு முன் என இரண்டு காலகட்டங்களில் நோக்க முடியும். அவை இரண்டிலும் பிரிக்க முடியாதது. எம்மக்களின் கண்ணீர் நீடித்துக் கொண்டே உள்ளது.

“அவற்றைத் தீர்க்க எமது தமிழகத்தின் மூலமாக கொடுக்கப்படும் செய்தி மத்திய அரசாங்கத்துக்குச் சென்று, அது இலங்கை அரசாங்கத்துக்கு தமிழரின் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது” என்றார்.

Related posts