கன்னியா வெண்ணீறூற்றுப் பகுதியில் விகாரை கட்டுவதற்கான இடைக்காலத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது…

(துதி)
 
இந்துக்களின் புனித பிரதேசமாகக் காணப்படும் திருகோணமலை, கன்னியா வெண்ணீறூற்றுப் பிரதேசத்தில் அண்மையில் விகாரை அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் அக் காணியின் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அப்பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த யூலை மாதம் 22ம் திகதி மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆஜராகி அக் காணியில் விகாரை அமைப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் மேலும் நான்கு விடயங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
 
அவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்த்தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவினை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் வாத விடயங்களைக் கருத்திற் கொண்டு நீதிபதியினால் எதிர்த்தரப்பினரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேலும் இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணையானது எதிர்வரும் ஒக்டோபர் 07ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இவ் விழக்கு விசாரணையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான கி.துரைராசசிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான கே.சயந்தன் ஆகியோரும் ஆயராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts