கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனா மரணங்கள் 160ஆகியது!கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்

பதின்மூன்று சுகாதாரப்பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நேற்றுடன்(15) 160ஆகியது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
கடந்த சில நாட்களாக மரணங்களின் வீதமும் தொற்றுக்களின் எண்ணிக்கையும் சற்று குறைவடைந்துவருகின்றது.எனினும் கொரோனா அபாயம் நீங்கிவிட்டதாகக்கருதமுடியாது.
இதுவரை இடம்பெற்ற 160 கொரோனா மரணங்களில் அதிகூடிய 22மரணங்கள் சம்மாந்துறையில்; சம்பவித்திருக்கின்றன. அடுத்ததாக 21மரணங்கள் நிந்தவூரிலும் 17மரணங்கள் அக்கரைப்பற்றிலும் இடம்பெற்றிருக்கின்றன.
 
கல்முனை தெற்கு சாய்ந்தமருது கல்முனை வடக்கு ஆகிய மூன்று சுகாதாரப்பிரிவுகளில் தலா 15மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதுவரை 6991 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் 6411பேர் குணமாகியுள்ள அதேவேளை 160பேர் மரணித்துள்ளனர். தற்சமயம் 420பேர் நோய்ப்பீடித்து சிகிச்சைபெற்றுவருனி;றனர்.
 
டெங்கு நோய்த்தாக்கம் தீவிரம்!
இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும் கூறினார்.
 
கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார.
 
அட்டாளைச்சேனை நிந்தவூர் காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் அதிகமாக டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts