கல்முனையின் ஆள்புல எல்லைக்குள் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி!

கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினர் மேற்கொண்டு வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது அண்மையில் பெரிய நீலாவணைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினர் ஊடுருவி எமக்குரிய சில இடங்களில் அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக எமது மாநகர சபையின் கடந்த மாத அமர்வில் கௌரவ உறுப்பினர் எஸ்.குபேரன் அவர்களினால் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அது விடயமாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றபட்டது. அதன்படி மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஒழுங்குகளை செய்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை 20ஆம் திகதி கார்ட் ரோட் வீதி வழியாக பெரிய நீலாவணையில் அமைந்துள்ள எமது பசளை உற்பத்தி நிலையத்திற்கு திண்மக்கழிவுகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் வழிமறிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதுடன் அவற்றின் சாரதிகளும் சுகாதாரத் தொழிலாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நானும் ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ராஜன், எஸ்.குபேரன் போன்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சித்தோம். ஆனால் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குழுவினர் எம்முடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டதுடன் எமது மாநகர சபை உறுப்பினர்களான எம்.ராஜன், எஸ்.குபேரன் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தி, வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது மேலும் சில ஊழியர்கள் தாக்கப்பட்டதுடன் எமது மாநகர சபையின் ட்ரம் ட்ரக் வாகனமும் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது. பொலிஸார் முன்னிலையிலேயே இச்சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்தப் பொலிஸார் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நின்றிருந்தனர்.

அதேவேளை சமபவம் தொடர்பில் சில பத்திரிகைகளுக்கு தவறான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. நாம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதிக்குள் அத்துமீறி குப்பைகளை கொட்டுவதாகவும் அவை தடுக்கப்பட்டதால் நாம் அங்கு சென்று அவர்களை அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எமது ஆள்புல எல்லைக்குள் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களே எம்மீது குற்றஞ்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களினதும் கல்முனை மாநகர சபை மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினதும் எல்லையே கார்ட் ரோட் வீதியாகும். இப்பாதையின் வடக்கு பகுதியானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் பெரிய கல்லாறு கிராமமாகும். இதன் தெற்கு பகுதியில் கல்முனை மாநகர சபையின் பெரிய நீலாவணை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் எமது கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பசளை உற்பத்தி நிலையம் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. நாளாந்தம் சேர்கின்ற திண்மக்கழிவுகள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டே அட்டாளைச்சேனை, பள்ளக்காட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறன.

சம்பவ தினம் இவற்றை ஏற்றிச்சென்ற வாகனங்கள் வழிமறித்து, தடுத்து வைக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அவற்றின் சாரதியாக்களையும் சுகாதார தொழிலாளர்களையும் தாக்கியுள்ளனர். சமபவம் இடம்பெற்ற எல்லை வீதியான கார்ட் ரோட் பாதை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபையினாலேயே கொங்க்ரீட் பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வீதியே எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்று கல்முனை வடக்கு கிராமாட்சி மன்றத்தினதும் கல்முனைத் தொகுதியினதும் வடக்கு எல்லையாகவும் இவ்வீதியே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டபோதும் அது நகர சபையாக, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டபோதும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களில் இந்த எல்லை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு இது போன்றதோர் பிரச்சினை ஏற்பட்டபோது கல்முனை வடக்கு கிராமாட்சி மன்றத்தின் தலைவராக இருந்த செனட்டர் மஷூர் மௌலானா, இரு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களை அழைத்து நடத்திய இரு தரப்பு சமரசக் கூட்டத்திலும் வர்த்தமானியின்படி இவ்வீதியே எல்லை என்று இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்தில் இந்த வர்த்தமானி பத்திரிகைகளை காண்பித்து தெளிவுபடுத்திய போதிலும் அவற்றை ஏற்றுக்கொள்ள குறித்த கலகக்காரர்கள் தயாராக இல்லை.

இதனைத் தொடர்ந்து கல்முனைப் பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்து விட்டு, அன்றைய தினமே நான் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் எடுத்துரைத்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த முரண்பாட்டை அவசரமாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இரு அரசாங்க அதிபர்களையும் கூட்டம் ஒன்றுக்கு அழைத்துள்ளேன். விரைவில் அவர்கள் இருவரினதும் பிரசன்னத்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இது விடயத்தில் கல்முனை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநகர உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். இதன்போது சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எமது எல்லையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட உறுப்பினர்கள், இது விடயத்தில் முதல்வர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டனர்.

Related posts