கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு அனைத்துத் தமிழ் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது…

 

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைபு வடிவம் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளிடமும் சென்ற வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் இறுதி நிலைப்பாட்டையும் கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கமையவே அடுத்த கட்ட செயற்பாடுகள் அமையும் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் மா.செல்வராசா தெரிவித்தார்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்குத் தமிழர் சார்பில் அதியுச்ச ஆசனம் பெறும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைக்கும் செயற்பாட்டின் முதற் கட்டமாக கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனைத்துத் தமிழ் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அதன் அடுத்த கட்டமாக கடந்த 2018.08.22 அன்று அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளையும் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒருசேர சந்தித்துப் பேசியது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைபு வடிவம் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளிடமும் சென்ற வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பின்னூட்டல்களையும், இறுதி நிலைப்பாட்டையும் கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கமைய பொதுச் சின்னத்தில் சம்மதிக்கும் கட்சிகளை ஒரு அரசியற் கூட்டு அமைப்பில் ஒருங்கிணைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை சம்மந்தப்பட்ட கட்சிகளினால் கைச்சாத்திடப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் செல்லவிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts