சன்ஸ்க்ரீன் – இயற்கை அளிக்கும் தீர்வுகள்

கோடை வரும் முன்னே சருமப் பிரச்னைகள் வரும் பின்னே..!’ என்று  புதுமொழி சொல்லுமளவுக்கு இந்தக் காலத்தில்தான் சருமப் பிரச்னைகள் நம்மைப் படுத்தும். வறண்ட சருமம், அரிப்பு, எரிச்சல், சருமம் சிவந்து காணப்படுதல், கண்களுக்குக் கீழ் கருவளையம் என வெயிலின் உக்கிரத்தால் ஏற்படும் பிரச்னைகளின் பட்டியல் நீளும். வெயில் பாதிப்புகளுக்கு இயற்கையான தீர்வுகள் சொல்கிறார் சித்த மருத்துவர் தமிழ்க்கனி.

* வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெயில்படும் இடங்களில் குறிப்பாக கை, கால்களில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக்கொள்ளலாம். இது புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

*
 உடலில் வெயில்படும் இடங்களில் எலுமிச்சைச் சாற்றுடன் தேன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கழுவ வேண்டும். இது சிறந்த கலரிங் ஏஜென்ட்டாகச் (Coloring Agent) செயல்படும். சருமத்தில் எண்ணெய்ப் பிசுபிசுப்பை நீக்கும்; நிற மாற்றத்தைச் சரிசெய்யும்.

*
 பப்பாளி, வாழைப்பழம் ஆகியவற்றைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் விழுதாக அரைத்து ஒருநாள்விட்டு ஒருநாள் ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். இதிலுள்ள கரோட்டினும், வைட்டமின் சத்துகளும் சருமத்தை மிருதுவாக்கும்.

* தக்காளி, கடலை மாவு, சந்தனத்தை பேஸ்ட் ஆக்கி, காலை நேரத்தில் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்வது சரும வறட்சியைத் தடுக்கும். இதில் சந்தனம் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்; கடலை மாவு, இறந்த செல்களை நீக்கும்; தக்காளி, சிறந்த கலரிங் ஏஜென்ட்டாகச் செயல்படும். ஆகவே இவற்றை மொத்தமாகச் சேர்த்துப் பயன்படுத்தலாம்; தனித்தனியாகவும் பயன்படுத்தலாம்.

*
 சூரியனின் கதிர்களால் சிலருக்கு சருமத்தில் கருமை படரும். இதை `சன் டேனிங்’ என்பார்கள். இந்தப் பிரச்னைக்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றைத் துண்டு துண்டாக நறுக்கி, நிறம் மாறிய பகுதிகளில் வைக்கவும். மூன்றையும் ஒரே நாளில் பயன்படுத்தாமல் ஒருநாள் தக்காளி, மறுநாள் வெள்ளரி என மாற்றிப் பயன்படுத்துவது நல்லது.

*
 இளநீர், தக்காளி ஜூஸ், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர் என உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிடுவது வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும்.

Related posts