சமுகஇடைவெளியைப்பேணி உயர்தரவகுப்பைமுதலில் தொடங்குவோம்.

ஜனாதிபதி செயலகம் பாடசாலை ஆரம்பமாகும் திகதி பற்றி அறிவித்ததும் கல்வியமைச்சின் 15/.2020 சுற்றுநிருபப்படி முதலில் நாம் க.பொ.த.உயர்தர வகுப்புகளை சமுகஇடைவெளியைப் பேணி ஆரம்பிப்போம்.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கல்முனையில் நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ்மொழிமூல 1ஏபி மற்றும் 1சி தர பாடசாலை அதிபர்களுக்கான விசேட கொரோனா விழிப்புணர்வுக்கூட்டம் கல்முனை வலயக்கல்விக்காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
 

கொரோனாவுக்குப்பின்னரான பாடசாலை ஆரம்பித்ததும் அதிபர்கள் எவ்வாறு மாணவர்கள் பெற்றோர்களுடன் நடந்துகொள்ளவேண்டும்? என்னென்ன நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை நடாத்துவது? என்பது தொடர்பில் இவ்விழிப்புணர்வுக்கூட்டம் மாகாணக்கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.

கூட்டத்தில் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் பிராந்திய தொற்றுநோயியல்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர்.நாகூர் ஆரிப் கல்முனை சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் எஸ்.கணேஸ்வரன் சம்மாந்துறை வைத்தியஅதிகாரி டாக்டர் சனூஸ் வலயக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன்(கல்முனை) வை.ஜெயச்சந்திரன்(திருக்கோவில்)ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் வருமாறு:

சுகாதார நடைமுறைகளின்படி பாடசாலைகள் ஆரம்பமாகமுன்பு தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும். அதற்காக சகலபாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கென 8.2மில்லியன் ருபாவை கல்வியமைச்சு வழங்கியிருந்தது.

இன்றைய கொரோனா மீழுதல் செயற்பாடுகளில் கிழக்கு பாடசாலைகளில் ஏதாவது அசாதாரண நிலை பிரச்சினைகள் ஏற்பட்டால் 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்த்துக்கொள்ளமுடியும்.

 

பாடசாலை ஆரம்பித்தல் நடாத்துதல தொடர்பாக சுகாதாரத்துறையினரின் ஆலோசனை அவ்வப்போது பெற்றுக்கொள்ளப்படும். தேவையானபோது அவர்களை அழைத்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும். பிரதேசத்திற்கு பிரதேசம் தேவைகள் வேறுபடலாம். எனவே அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

க.பொ.த. சா.தர வகுப்புகளை ஆரம்பிக்கவிரும்பும் பாடசாலைகள் போதிய வசதிகள் இருப்பின் மாகாணகல்விபணிப்பாளரின் முன்அனுமதியுடன் ஆரம்பிக்கலாம்.

 

கட்டாயம் சமுகஇடைவெளி பேணும்வகையில் வகுப்புகள் ஒழுங்குசெய்யப்படவேண்டும். முடியுமானால் வெப்பநிலை அளவிடலையும் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.

றிப்பாக முதலில் க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அவர்களை பாடசாலையில் பிராதான மண்டபத்தில் பரீட்சைக்கு எவ்வாறு அமர்த்தப்படுவார்களோ அவ்வாறு அவர்களது ஆசனங்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.

மாணவர்கள் முகக்கவசத்துடன் வருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அதிபர்கள்  தேவையானால் மேலதிக முகக்கவசங்களை தம்வசம் வைத்திருத்தல்வேண்டும்.

 

பாடசாலை ஆரம்பமாகும் நேரம் முடிவடையும் நேரத்தை அதிபர்கள் வசதிக்கேற்ப தீர்மானித்துக்கொள்ளமுடியும். மாணவர்கள் ஆட்டோவில் வருவதானால் ஓர் ஆட்டோவில் இரு மாணவர் மாத்திரம் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படவேண்டும்.

 

பாடசாலைக்கான உணவுச்சாலை (கன்ரீன்) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கவேண்டும். மாணவர்கள் தமக்குத்தேவையான தின்பண்டங்களை வீட்;டிலிருந்தே பாதுகாப்பாக  கொண்டுவரவேண்டும். உண்ணும்போது மாணவரிடையே பகிர்ந்து உண்ணுதலை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

 

பொதுவாக பெரிய பாடசாலைகளில் ஒலிபெருக்கி வசதிகள் உள்ளதால் காலை ஒன்று கூடல்களை தவிர்க்கவேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒன்றுகூடுதல்களை முற்றாகத்தவிர்க்கவேண்டும். சிலகாலம் விளையாடுதலையும் புறக்கிருத்திய ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் தவிர்க்கவேண்டும்.

உயர்தர வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் வரும்போது ஏனைய ஆசிரியர்கள் வரவேண்டிய அவசியமில்லை என உணரப்படுகிறது.

 

கட்டாயம் குடிநீர் வசதியை மலசலகூட வசதியை அதிபர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். உள்ளுராட்சிமன்றத்தின் உதவியையும் பெற்றுக்கொள்ளமுடியும். நீர்த்தாங்கி இல்லாத பாடசாலைகள் வலயக்கல்விப் பணிப்பாளர்களுடாக மாகாணகல்விப்பணிமனைக்கு விண்ணப்பித்தால் அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

தேவையான அறிவுறுத்தல்களை ஆங்காங்கே பானர்களை தொங்கவிடுவதன் மூலம் விழிப்புணர்வை மேற்கொள்ளமுடியும்.

மதியஉணவு பெற்றுவந்த மாணவர்களுக்கு 1000ருபா உலருணவுப்பொதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆரம்பமானதும் அச்செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

கொரோனா வைரஸ் அதீத பரவலுக்குரிய வைரசாகும். எனவே ஒரு மாணவனுக்கு தொற்று ஏற்பட்டால் விளைவு விபரீதமாகிவிடும். எனவே அனைவரும் இதுவிடயத்தில் ஒத்துழைக்கவேண்டும். என்றார்.

 

அதேவேளை வைத்திய அதிகாரிகள் சுகாதார நடவடிக்கைகள் பாடசாலையில் முன்னெடுக்கப்படவேண்டிய முன்னாயத்தங்கள் பற்றியெல்லாம் விளக்கவுரை நிகழ்த்தினர். மேலும் கொரோனா வைரஸ் கிருமி உடலினுள் சென்றதும் என்ன மாற்றம் நடக்கிறது? என்பது தொடர்பில் டாக்டர் சனூஸ் பூரணவிளக்கமளித்தார்.

Related posts