ஜனாதிபதி வேட்பாளார் – ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

அதாவது சஜித் பிரேமதாசவிற்கு பின்னால் ஒரு தரப்பினரும் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு பின்னால் மற்றுமொரு தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்தை தெரிவித்து வருவதாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என கட்சி சார்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறாக, அவர் பிரதமராக தொடர்ந்தும் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் சஜித் பிரேமதாச அல்லது கரு ஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவரைஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்யவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாச நியமிக்கப்பட்டால், நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்படும் என கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சியில் ஒரு தரப்பினர் கரு ஜயசூரிய சபாநாயகராகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர். மற்றுமொரு தரப்பினர் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டால் அவருக்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த ஒரு முடிவையும் ஐக்கிய தேசிய கட்சி எடுக்கவில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் முற்கூட்டியே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதேவேளை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான நேரம் இது அல்ல என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts