தனிமைப்படுத்தல் முடக்கத்திலுள்ள காத்தான்குடிப் பிரதேச மக்களுக்கு முதல்கட்ட அரச நிவாணம் பகிர்ந்தளிப்பு

தனிமைப்படுத்தல் முடக்கத்திலுள்ள காத்தான்குடி பிரதேச மக்களுக்கான முதல்கட்ட அரச நிவாணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.
 
கடந்த டிசம்பர் 30 ஆந்திகதி மட்டக்களப்பு நகர் மற்றும், காத்தான்குடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் பொழுது அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அரசாங்க அதிபர். கே. கருணாகரன் அறிவித்தார்.
 
இதனையடுத்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவு, நகர சபை, பிரதேச செயலகம், பொலிசார், முப்படை, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துளைப்புடன் இடம்பெற்று வருகின்றன.
 
இவ்வாறு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக இவ்வாண்டில் இதுவரை 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
 
இதுதவிர வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்தி 594 குடும்பங்களுக்கான முதல் கட்ட நிவாரணத்திற்காக 6 கோடி 79 இலட்சத்தி 70 ஆயிரம் ரூபா நிதி மாவட்ட செயலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் உணவுப் பொருட்களாக வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் மாவட்ட செயலக ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
 
மேலும் இப்பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடு வீடாக இந்நிவாரனப் பொருட்கள் பகிர்தளிக்கும் பணிகள் இரவு பகலாக இடம்பெற்றுவருகின்றது.
 
கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் இவ்விசேட பணியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இரானுவத்தினர் மற்றும் கிராம மட்டக்குழு உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts