தமிழ்தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானது. பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்

வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒப்பானது  என நாவிதன்வெளி பிரதேச தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அம்பாரை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார்.

முன்னைநாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகி தவராசா கலையரசன் தலைமையில் நாவிதன்வெளி பிரதேசசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய அரசியல் குழப்ப நிலையில் தமிழ் தேசிய  கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்  26 நண்பகல் பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது.
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் அமைச்சு பதவிகளுக்கும் பணத்திற்கும் விலைபோக மாட்டார்கள். எமது உரிமை போராட்டம் தொன்மை மிக்கது.
சிலர் அமைச்சு பதவிகளை எடுத்து சேவை செய்யலாம் என்பர் ஆனால் உள்ளார்ந்த ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சு பதவிகளை எடுப்பது எமது நோக்கமல்ல ,அமைச்சுப்பதவிகளை பெற்று அபிவிருத்திகளை செய்ய முனைந்திருப்பின் தலைமைகள் எப்போவோ செய்திருப்போம்.
மகிந்த ராஜபக்ஷே, நாமல் ராஜபக்ஷே என்னை தொடர்புகொண்டு கட்சிக்கு ஆதரவளிக்க சொல்லி விலைபேசினர். அமைச்சு பதவி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தி தருவதாகவும்,  இரண்டு புதிய தமிழ் பிரதேச சபைகள் உருவாக்கி தருவதாகவும் என்னுடன் கதைத்தனர். நாங்கள் கொள்கையில் உறிதியானவர்கள். இவை சிலருக்கு கசப்பாக இருக்கும் சலுகைகளும் பதவிகளும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு முரண்பாடானது.
மகிந்தவிற்கு ஆதரவளித்த வியாளேந்திரனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏன் எனில் தமிழ் மக்கள் அபிவிருத்தியை கோரிய போதிலும் தமிழ்தேசியத்தில் பற்றுறுதியுடையவர்கள் என்பதனை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்திவருகின்றனர்.
எழுபது வருட எமது போராட்டம் தமிழர்களுக்கான தீர்வு திட்டம் என்ற அச்சாணியை கொண்டே சுழல்கின்றது.அது வடகிழக்கு இணைப்போ, சுயாட்சி அதிகாரமோ கிடைக்குமெனில் தொழில்விய்ப்புகள்,சட்டம் நீதி, காணி சம்பந்தமான விடயங்களை கையாள ஏதுவாக அமையும்.
தமிழர்களுக்கான  அபிவிருத்தி என்பது மலைக்கு மடுவிற்கும் ஒப்பானது பாரிய ஏற்றத்தாழ்வுடையது இவற்றை மறுக்கமுடியாது எமது இலட்சியம் தீர்வுகளை நோக்கியது .
தற்போது தொண்ணூற்று இரண்டாயிரம் தமிழ் வாக்காளர்களை கொண்ட அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்களின் நிலை நெருக்குவாரத்திற்குரியது. ஒருபக்கம் முஸ்லிம்கள் மறுபக்கம் சிங்களவர்கள் வறுமை,வேலைவாய்பின்மையை பயன்படுத்தி மதமாற்றம், ஆலயங்கள் அருகே மாட்டிறைச்சி எலும்புகளை கொட்டி முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் வேதனையை தருகின்றன. என தெரிவித்தார்.
இவ் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்னசிங்கம் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

Related posts