தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதங்கள் தொடர்பில் இராணுவ அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பாடசாலைகள், ஆலயங்களின் பாதுகாப்பு தொடர்பிலான நடைமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் உணரும் வகையில் தெளிவுபடுத்துவது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து வீணான சந்தேகங்களைக் கடந்து ஒரு சுமூக நிலையை ஏற்படுத்துகின்ற விதத்திலும், மீண்டும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாத வகையில் நிலைமை ஏற்பட வேண்டும் என்ற வகையிலாக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக தற்போதைய நிலையில் ஆலயங்களின் திருவிழாக்கள் இடம்பெறும் காலமாக இருப்பதால் அவற்றின் பாதுகாப்பு விடயங்களில் முன்கூட்டியே செயற்படும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts