தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம்

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7 மணியளவில் கல்முனை நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பிற்கு கடந்த 7 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர்.

அக் கடிதத்தில் “கல்முனையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பிரதேச செயலகம்”தொடர்பாக. ஊடக மாநாட்டிற்கு அழைப்பிதழ் விடுத்திருந்தனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என கல்முனை மறுமலர்ச்சி கழகம் குறிப்பிட்ட சொற்பதம் கல்முனை நகரில் தமிழ் ,முஸ்லிம் மக்களிடையே கிளர்ச்சியை தோற்றுவிக்கும் என்பதன் அடிப்படையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்து அவ் ஊடக மாநாட்டிற்கு தடையுத்தரவை பெற்றிருந்தார்.

இவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் இனவாதிகளுக்கெதிராக சர்வமத தலைவர்கள் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தனர்.

30 வருடங்களுக்கு மேலாக இயங்கிரும் அரச திணைக்களமான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதம் என சுட்டிக்காட்ட யார் இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது.

பிரதேச செயலாளர், உப செயலாளர் 250 மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கும் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளவர்கள் சட்டவிரோதம் என்பதனூடாக இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் விதமாக செயற்படுவது தமிழர்களது மனங்களை புண்படுத்துவதாகதெரிவித்தனர்.

இலங்கை அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப இயங்கிவரும் பிரதேச செயகத்தை தரமுயர்த்த தடையாக இருக்கும் குறுகிய மனம்கொண்ட சிலர் சட்டவிரோத பிரதேச செயலம் என்பதனூடாக தங்களது வாக்கு வங்கியை பாதுகாக்கவே முயல்கின்றனர்.

பாராளுமன்ற அமர்வுகளின் போது காரசாரமாக விவாதிக்கப்பட்டுவரும் வேளையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு விடுமோ என அச்சத்தில் குழப்பும் நோக்கிலே மறுமலர்ச்சி கழகம் ஊடக சந்திப்பினை மேற்கொள்ள எத்தனித்ததாக சர்வமத தலைவர்கள் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.

Related posts