தரம் 5 புலமைப்பரீட்சை குறைவு வீதத்திற்கு மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையான பொறுப்புக் கூறல் வேண்டும்.

மட்டக்களப்பு கல்வி வலயம் வெளியாக்கிய 2019ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 4.52 வீதத்தினால் குறைவடைந்து கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் 16வது இடத்திற்கு பின்னடைவை அடைந்துள்ளமைக்கு கல்வி வலய அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையாகப் பொறுப்புக் கூறல் வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத் துரை உதயரூபன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திகளில் குறிப்பிட்டுள்ளார். 
 
 
2018ம் ஆண்டு வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 36.12 ஆகவும், 2019ம் ஆண்டு 31.31 வீதமாக காணப்படுவதோடு மாவட்ட ரீதியில் 4.52 வீதத்தினால் குறைவடைந்திருப்பதோடு வலயத்தில் முன்னிலையில் இருந்த ஏறாவூர் பற்று கோட்டம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதாக செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 
 
இதே வேளை, கடந்த ஆண்டை விட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் கல்குடா கல்வி வலயம் 1.42 வீத அதிகரிப்பையும், ஏனைய வலயங்களான மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு கல்வி வலயங்கள் முறையே 1.27, 1.07, 1.04 சதவீத அதிகரிப்பில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் அரசின் தேசிய கொள்கைக்கு அமைவாக தரம் 5 மாணவர்களின் புலமைப்பரீட்சைக் கொடுப்பனவானது ரூபா 500 இலிருந்து ரூபா 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார, சமூக பின்னடைவில் உள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பின் தங்கிய கோட்டங்கள் மோசமான பின்னடைவுக்கு வலயத்தின் வினைத்திறனற்ற நிர்வாகக் கட்டமைப்பே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
மேலும் வலயத்தில், தேசிய கல்விக் கொள்கையை முன்னெடுப்பதற்காக பிரமாணக்குறிப்புகளுக்கு அமைவாக பாட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் இருப்பதோடு ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் இருந்தும் ஆரம்பக் கல்விக்கான தேசியக் கல்விக் கொள்கையானது வலயத்தினால் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மனித வளங்களும் தேசிய பாடசாலைகளும் அமைந்துள்ள கல்வி வலயத்தில் மாகாண பாடசாலைகள் வினைத்திறனான, தரமான கல்விக்கான செயற்பாடுகள் மூலம் சிறப்பான பரீட்சைப் பேறுகளைப் பெற்றுள்ள நிலையில் தேசிய பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் தரமான கல்விக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், ஆரம்பக் கல்விக்காக தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரைகள், யுனிசெப், யுனெஸ்கோ என்பவற்றின் தேசிய கொள்கைக்கு அமைவாக பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டும் தூர நோக்கமற்ற, வினைத்திறனற்ற வலயத்தின் செயற்பாடுகளினால் ஆரம்பக் கல்வி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.   

Related posts