திருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே!

1.  தமிழ் என்னும் பெயரைச் சொல்லாமலே, தமிழுக்குத்  தனிப்பெருஞ்  சிறப்பு தந்தவர் திருவள்ளுவர்.

2. தமிழினம் என்னும்  பெயரைச் சொல்லாமலே, தமிழினத்திற்குத் தனிப்பெரும் சிறப்பு வழங்கியவர் திருவள்ளுவர்.

3.  தமிழ்நாடு என்னும்  பெயரைச் சொல்லாமலே, தமிழ் நாட்டுக்கு உலகில் ஒப்பிலாப் புகழ் நல்கியவர் திருவள்ளுவர்.

4.  தம்மை அறநெறியாளர்,  இறைவழிஞர் என்று சொல்லாமலே தமிழர் நெறி வழங்கிய தாதாவாக விளங்கிக் கொண்டு இருப்பவர் திருவள்ளுவர்.

5. தமிழர் சமயம் என ஒன்றைப் படைப்பதாகச் சொல்லாமலே தமிழற்கமைந்த மெய்யியல் வழங்கிய மேதகைத் தோன்றல் திருவள்ளுவர்.

6. ஓதாக் கல்வி என்றும், சாயாக் கலை என்றும், பொதுநெறியாம் சன்மார்க்கம் என்றும், ஆன்ம நேயம் என்றும், தவநெறி என்றும், நுண்மாண் நுழைபுலத் தேர்ச்சியர்   சொல்வனவற்றையெல்லாம், எண்மையாய், உள்ளங்கை  நெல்லிக்கனியென உலகவர் உணரச் செய்த உயரிய படைப்பாளர் திருவள்ளுவர்.

7. ஊழ் என்னும் மயக்கப் பொருளின் அடிவேர் முதல் முடிவித்து வரை கண்டு, மூழ்கி எடுத்த முத்துப் போல  ‘உலகத்து இயற்கை ‘ என ஒரு முறைக்கு மும்முறை பலாச்சுளையாகப் பளிச்சிடத் தந்த கொடையாளர் வள்ளுவர்! அதன் இருவேறு தன்மையும் இயம்பியவர்.

8. பிறர் பிறர் போல நாற்பால் கூறாமல், தமிழர் நெறி முப்பாலே எனப் பண்டையோர் நெறியைக் கண்டு பகுத்து வைத்து, முப்பால் என்று பின்னவர் பெயரீடு செய்யப் பெருவளம் அருளிய பெருந்தக்கார் திருவள்ளுவரே!

திருவள்ளுவர் சிறப்புகள் என்பவை திருக்குறளின் சிறப்புகளே!

படைப்பாளர் தாமே படைப்பின் மூலவர்!

வாழிய நலனே! வாழிய நிலனே!

Related posts