நடுக்கடலில் மரணித்த மீனவருக்கு சபையில் அனுதாபம்! மகளுக்கு தற்காலிக தொழில்வழங்கவும் சபை தீர்மானம்.

நடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு அனுதாபம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரது 3பெண்பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இத்தீர்மானங்கள் (14)திங்கட்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டன.
 
காரைதீவு பிரதேசசபையின் 20வது மாதாந்த அமர்வு சபைமுதல்வர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்  சபாமண்டபத்தில் நடைபெற்றது.
 
அதன்போது த.தே.கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி ‘மரணித்தமீனவரின் குடும்பநிலையை மிகுந்த அனுதாபத்துடன் தெரிவித்து அவலநிலையில் நிர்க்கத்தியாகவுள்ள அக்குடும்பத்திற்கு உண்மையில் உதவவேண்டுமானால் மீண்டும் நிதிவழங்குவதைவிடுத்து 3படித்த பெண்பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்திற்கு பேருதவியாகவிருக்கும்’ என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.
 
இப்பிரேரணையை தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையைஉயர்த்தி அமோகமாக ஆதரித்தனர். எனினும் உபதவிசாளர் எ.எம்.எம்.ஜாகீர் எவ்வித சைகையுமில்லாமல் அமர்ந்திருந்தார்.
 
குறித்த பிரேரணையின்பிரகாரம் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் அனுமதியுடன் இத்தொழிலை வழங்க மனிதாபிமானத்தோடு செயற்படுவோம் என்று தவிசாளர்ஜெயசிறில் கூறினார்.
 
தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்
நாம் அரசியலில் வேறுபட்டவர்களாகவிருந்தாலும் எமது சேவைகள் இனமத பேதமின்றிமக்களுக்கான சேவையாக அமையவேண்டும். நான் எப்போதும் அதைக்கடைப்பிடித்துவருகிறேன். எனினும்  என்மீது சேற்றை அள்ளிவீச சிலர் முயற்சிசெய்துவருகிறார்கள்.
 
கடலில் ஒருவர்மரணித்தால்ஓரிரு நாள் பார்ப்பார்கள் .மறுகணம் அவ்வுடலை கடலில் விடுவது ஒன்றும் விசித்திரமல்ல. அதற்காக தமிழ்மீனவரை கொன்றுவிட்டார்கள்.இனிமேல் தமிழ்மீனவர்கள்கடலக்கு செல்லவேண்டாமென்று நான்கூறியதாக வேண்டுமென்றே வீண்  புரளியை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
 
அந்தமீனவரின் வீட்டிற்கு சென்று முதற்கட்டமாக ஒருதொகைநிதியைவழங்கினோம். அப்போது எமது உறுப்பினர்கள் ஊடகவியலாளர் அனைவரும் இருந்தோம். அங்கு அவரது மனைவி கூறினார். கணவனுக்கு வீசிங்(மூச்சுநோய்) இருப்பதாகவும் ஒருநாளைக்குரிய ஒரு குளிசையும் பம்பும் கொண்டுசென்றார். இன்று ஒருவாரகாலமாகிறதே என்னசெய்வாரோ தெரியவில்லை என்று அழுதார். 
அந்தச்செய்திமூலமாகத்தான் காரைதீவிலிருந்து ஒரு மீனவர் கடலுக்குச்சென்று காணாமற்போன செய்தி உலகத்திற்கு தெரியவந்தது. இன்று அந்தமீனவரில்லை. அக்குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபங்கள். என்றார்.
 
மேலும் எமது ஊரைச்சேர்ந்த ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா சேர் ஒரு கல்வியியலாளர். அவருக்கு அண்மையில்இரு தேசிய அரசவிருதுகள் கிடைக்கப்பெற்றன. ஜனாதிபதி ஊடக சான்றிதழ்விருது இந்துகலாசார திணைக்கள கலைச்சுடர்விருது என்பன. அந்த உயரிய கௌரவம் பெற்றமைக்காக எமது சபையும் அவரை வாழ்த்துகிறது.பாராட்டுகிறது.
 
அதனையிட்டு உறுப்பினர்களான இ.மோகன் எ.பஸ்மீர் ஆகியோரும் வாழ்த்துத்தெரிவித்துரையாற்றினர்.
காரைதீவு எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மடுவமிருந்த இடத்தில் இறைச்சிக்கடைகட்டுவது தொடர்பாக பிரேரணை முன்வைக்கப்பட்டபோது வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 4வாக்குகளும் எதிராக 4வாக்குகளும் நடுநிலையாக 3வாக்குகளும் அளிக்கப்பட்டன. இறுதியில் தவிசாளரின் வீற்றோ வாக்கொன்றினால் பிரேரணை வெற்றியீட்டியது.
 
வெள்ளைப்பிரம்புதினத்தை சபையினால் அனுஸ்டிப்பதற்கும் சபை அனுமதி வழங்கியது.

Related posts