நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் புதிய திருத்தம் – வர்த்தமானி வெளியானது!

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற அரசியல் குழப்பத்துக்கு முன்னர் அரசாங்கம் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அரசாங்கத்தின் செலவீனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கடன்தேவை என்பவற்றில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் முன்வைத்திருந்ததுடன், கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படவிருந்தது.

இவ்வாறான நிலையில் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டது.

புதிய மதிப்பீடுகளுக்கு அமைய அரசாங்கத்தின் கடன்பெறும் அளவு இந்த வருடத்தில் 256பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளது. முன்னர் 1944மில்லியன் ரூபாய்களாக மதிப்பிடப்பட்டிருந்த கடன்தேவை 2,200பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் மிகவும் உயர்ந்த கடனுக்கான கோரிக்கையாக இது அமைந்துள்ளது.

4,376பில்லியன் ரூபாய்களாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் 4,470பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 488பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் மொத்த வருமான எதிர்பார்ப்பு 2,400பில்லியன்களாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 306பில்லியன் ரூபா 393பில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் ஏனைய திணைக்களங்களை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமையே இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 103பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 4.8பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு 187.4பில்லியன் ரூபாய்களையும், கல்வி அமைச்சுக்கு 105பில்லியன் ரூபாய்களையும், உயர்கல்வி, நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு 126.5பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2019வரவுசெலவுத்திட்டம் முதலாவது வாசிப்புக்காக பெப்ரவரி 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருப்பதுடன், நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மார்ச் 5ஆம் திகதி வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதிக்கான செலவீனம் 9.98 பில்லியன் ரூபாயிலிருந்து 13.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டில் 8.2 பில்லியன் ரூபாய்கள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எஞ்சியவை நிர்வாக செயற்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகத்துக்கு 1.6 பில்லியன் ரூபாய்கள் இவ்வருடத்துக்கான ஒதுக்கீடாகும். பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு 98 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts