நீதிமன்றக் கட்டளையில் சுகாதாரம் தொடர்பான விடயத்தை மதித்தே நினைவேந்தலை நிறுத்துகின்றோம்

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்வதோடு,  அந்த நிதிமன்றக் கட்ளையை மீறி அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொதுச் சகாதார சட்டத்தினை நாங்கள் மீறினோம் என்கின்ற விடயம் கலங்கம் ஏற்படுத்தும் என்பதைக் கருத்திற் கொண்டு தான் இந்நிகழ்வினை பெருந் துயரோடு நிறுத்துகின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு பணிமனையில் ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் தலையீடு மற்றும் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
2019 மே 18ல் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை உலகம் பூராகவும் நினைவு கூரப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையிலே நாங்கள் இந்த துக்ககரமான நிகழ்வினை அனுஸ்டிக்கும் முகமாக மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணியகத்திலே நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். இப்போது இருக்கின்ற கொரோனா வைரஸினுடைய தாக்கம் தொடர்பான நிலைமைகளையும் அனுசரித்துக் கொண்டும், சமூக இடைவெளியினைப் பாதுகாத்துக் கொண்டும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தோம். எந்தவொரு சுகாதார சட்டத்தையும் மீறுகின்ற வகையிலே நாங்கள் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
 
இருந்தபோதிலும் இன்று காலை 09.00 மணியளவிலே மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் என்னை அழைத்து இது பற்றி வினவினர். இந்த நிகழ்வினை நிகழ்த்தாது இருக்கும் படியான ஒரு வேண்டுகோள் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்டது. இது தடைசெய்யப்பட்ட நிகழ்வு அல்ல, பொது இடங்களில் செய்வது தொடர்பில் பொது சுகாதார நிமைகளைப் பேண வேண்டும் என்றே சொல்லியிருக்கின்றார்கள். அதன் படி நாங்கள் இந்த நிகழ்வினை நடத்துவோம் என்று தெரிவித்தேன். இதற்கு மேலதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இதற்கு அவர்களோடு நீங்கள் பேசுங்கள் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
இதன் பின்னர் நான் பொலிஸ் அத்தியேட்சகரைச் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பாக முற்படுகின்ற போதே அவர் தெரிவித்தார் இந்நிகழ்வினை நீங்கள் விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்காக மேற்கொள்கின்றீர்கள் என்று கூறினார். அப்போது நான் தெரிவித்தேன், இது முள்ளிவாய்க்கால் பேரவலத்திலே கொல்லப்பட்ட எமது உறவுகளை, பொதுமக்களை நினைவு கூருகின்ற நிகழ்வே இது. இதனை நடத்துவதற்கு ஏற்ற சுகாதார நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம். ஆகக் கூடியது எத்தனை உறுப்பினர்களை இதில் பங்குபற்றச் செய்ய முடியும் என நீங்கள் குறிப்பிட்டால் அதனை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று தெரிவித்தேன். பின்னர் அவர் தெரிவித்தார் இது தொடர்பில் நீதிமன்றக் கட்டளை இருக்கின்றது என்று. நீதிமன்றக் கட்டளையினைத் தாருங்கள் என்று கேட்க அது தொடர்பில் இப்போதுதான் நீதிமன்றில் விண்ணப்பித்திருக்கின்றோம் அது கிடைத்தவுடன் உங்களுக்கு வழங்கப்படும் என்றார். அப்போது நான் தெரிவித்தேன் நாங்கள் இந்த நிகழ்வினை குறித்த நேரத்தில் எமது பணியகத்தில் நடாத்துகின்றோம். நீதிமன்றக் கட்டளை கிடைத்தால் அதனைக் கொண்டு வாருங்கள். அதற்கேற்றால் போல் நாங்கள் நடந்து கொள்வோம் என்று தெரிவித்துவிட்டு வந்தேன்.
 
இங்கு வந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது பொலிஸாரினால் நீதிமன்றக் கட்டளை கொண்டு வந்து தரப்பட்டுள்ளது. இந்தக் நீதிமன்றக் கட்டளையிலே “இந்த நிகழ்வு செய்வதனால் சமாதானத்திற்குப் பங்கம் விளையக் கூடிய நிலைமை இருக்கின்றது அதனைத் தடுக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் சம்மந்தமான பாதுகாப்புகள் இங்கு மீறப்படும் என்றும், இங்கு அதிகளவான மக்கள் சேரக்கூடிய நிலைமை இருப்பதால் அது ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும்” என்றும் அக்கட்டளையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாங்கள் இந்த சுகாதாரம் சம்மந்தமான விடயத்தைக் கவனமாகக் கையாளுவதற்காகவே இருந்தோம். அதிகமான பொதுமக்கள் இங்கு கூடுவதற்கான ஏற்பாடுகள் இருக்கவில்லை.
 
எனினும் இதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. நீதிமன்றம் கட்டளையிட்டாலும் கூட அந்த நிதிமன்றக் கட்ளையை மீறி அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால், இதிலே வைரஸ் பரவல் தொடர்பான ஒரு விடயமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வைரஸ் தொடர்பான சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறிவிட்டது என்கின்ற விடயம் எமக்கு கலங்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்தக் காரணத்துக்காக மாத்திரமே நாங்கள் இந்த நிகழ்வைத் தொடராமல் இத்தோடு நிறுத்திக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம்.
 
கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் இந்தக் கட்ளையில் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். அதன் படி முதலில் நாங்கள் கைது செய்யப்படவும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களது வாதங்களை முன்வைக்கவும் தயாராக இருக்கின்ற போதிலும் பொதுச் சகாதார சட்டத்தினை நாங்கள் மீறினோம் என்கின்ற விடயம் கலங்கம் ஏற்படுத்தும் என்பதைக் கருத்திற் கொண்டு தான் இந்நிகழ்வினை நாங்கள் பெருந் துயரோடு நிறுத்துகின்றோம்.
 
ஆனால் பொதுமக்கள் தங்களின் உணர்வில் இருந்து எழுகின்ற இந்த விடயத்தை அணைக்க முடியாது என்கின்ற வகையில் தங்களின் வீடுகளில் சுடரேற்றி எமது வன்கொலை செய்யப்பட்ட உறவுகளை நினைகூருமாறும், இன்றைய தினம் தாங்களின் உணவு வேளைகளில் ஒரு வேளை உணவாக அல்லது உணவுகளில் ஒரு பதார்த்தமாக கஞ்சியை சேர்த்துக் கொள்ளுமாறு மிகவும் அன்போடும், வினயத்தோடும் கேட்டுக் கொள்வதோடு, மிகப் பெரிய துக்கத்தோடு நீதிமன்ற கட்டளையை மதித்து இந்த நிகழ்வினை நிறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Related posts