படைப்புழுவின் தாக்கம்; நெற்செய்கை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துவருகின்றமையால், விவசாயிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த போகத்தில் நீர் கிடைக்காமையால் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல், இம்முறையே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகச் சொற்ப காலமே நெல் அறுவடைக்கு இருக்கும் நிலையில், படைப்புழுவின் தாக்கத்துக்குட்பட்ட நெற்கதிர்கள் மிக வேகமாகப் பாதிப்படைவதுடன், முற்றாக அழிந்தும் விடுகிறது. அத்துடன், அவை ஏனைய நெற்கதிர்களுக்கும் பரவிவருகின்றது.

 இதனால் தங்களது வாழ்வாதாரத் தொழிலாக நெற்செய்கையை நம்பி வாழும் விவசாயிகள், நெற்செய்கையை முற்றாகக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அறுவடையை நம்பி, வங்கிகளிலும் ஏனைய தனியாரிடமும் பெற்ற கடன்களை மீளக் கொடுக்கமுடியாத துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளுக்கு உடன் தகுந்த நட்டஈடு வழங்குமாறும், படைப்புழுவை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் விவசாயத்துறை அதிகாரிகள் வழங்குமாறும், அம்பாறை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts