பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக்கப்படுவதில் மறுபரிசீலனை வேண்டும்.

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்ற செய்தி இன்று பரவலாக பேசப்பட்டுவருகின்றது.
இந்தச்செய்தியில் உண்மைத்தன்மை எத்தகையது என்பதற்கு அப்பால் இது சமுகத்தில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
அதுதொடர்பாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாறுகாணாத ரீதியில் உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் இந்தசின்னஞ்சிறிய அழகானஇலங்கைத்தீவையும் விட்டுவைக்கவில்லை.
 
உலகவல்லரசுகளே ஆட்டங்கண்டிருக்கின்ற இன்றைய நிலையில் சின்னஞ்சிறு இலங்கைத்திருநாட்டில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவகையில் முன்னேற்றம்கண்டு கொண்டிருக்கிறது.
 
உலகமே வியக்கும்வண்ணம் உலகில் கொரோனாகட்டுப்படுத்தும் நாடுகளின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பதென்பது உண்மையில் மெச்சத்தக்கது. ஜ.நா. மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற உலகளாவிய அமைப்புகள் இலங்கையின் கட்டுப்பாட்டுச்செயற்பாடுகளைப்புகழ்ந்து பாராட்டியுள்ளன.
அதற்காக எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்தராஜபக்ச கொரோனாத்தடுப்பு செயலணித்தலைவர் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மற்றும் சுகாதார பாதுகாப்புத்தரப்பினர் ஈண்டு பாராட்டத்தக்கவர்கள்.
இரவுபகல் பாராமல் மக்களைப்பாதுகாக்கும் நோக்கில் பலவித முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாமறிவோம் உலகறியும்.
 
கொவிட் 19 – ஒரு பார்வை.
 
 கொவிட்19 (COVID 19) எனப்படும் கூர்ப்படைந்த கொரோனா வைரஸ்  சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து உலகில் 210நாடுகளையும்தாண்டி அகோரதாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. சுமார் 32லட்சம் பேரைத்தொற்றியுள்ள இக்கொடியநோய்க்கு இதுவரை சுமார் 2லட்சத்திற்கும் அதிகமானோர்   பேர் பலியாகியிருக்கிறார்கள்.உலகளாவிய பண்டமிக்- PANDEMIC எனும் உலகளாவியரீதியிலான நோய் உலகிற்கு இது முதற்றடவையல்ல.
 
1918-1920களில் ஸ்பானிய காய்ச்சல் SPANISH FLUஎனும் நோய் உலகில் 5கோடி மக்களை பலியெடுத்ததாக பதிவுகளுள்ளன.2002இல் சார்ஸ் SARS வைரஸ் 2012இல் மேர்ஸ் MERS வைரஸ்.இவையெல்லாம் கொரோனா இனவைரஸ் ஆகும். எனினும் அண்மையில் பரவியயிருக்கின்ற கொவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே முடக்கியிருக்கிறது.
 
இக்கொரோனா வைரஸ் நோய்க்கு இலங்கைவிதிக்கல்ல. மார்ச் 11முதல் இதுவரை இந்நோயக்கு 7பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை 623பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலைகளில் சுமார் 478பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். எனினும் 134பேரளவில் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
இதேவேளை பரவலாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன. இந்த தரவுகளை ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் இலங்கையின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிறந்த ஒழுங்கமைப்புடன்கூடியதாக இருப்பதாகத் தெரிகிறது.
 
இலங்கை அரசாங்கம் அதன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் விரைந்து பல காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தது மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தமை இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.
 
சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள்.
கொரோனா வைரஸ் பற்றியறிந்ததும் இலங்கையிலுள்ள 10ஆயிரத்துக்குமேற்பட்ட பாடசாலைகளை மூடியதுடன் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் கலாசாலைகள் கல்வியியல்கல்லூரிகள் முன்பள்ளிகள் போன்றவற்றை மூடினார்கள்.
அதேவேளை இக்கொடியநோயை நாட்டிற்கு ஊடுருவாமல் தடுக்கவேண்டுமென்பதற்காக உடனடியாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இதற்கென விசேட செயலணியை நியமித்து அதற்கான அதிகாரத்தையும் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
கொவிட் -19 வெடிப்பைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்திற்கு தலைமை தாங்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பணிக்கப்பட்டுள்ளார்இ இது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் 1090 ஆம் இலக்க ஸ்ரீ ஜெயவர்தனபுராஇ ராஜகிரியாவின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது.
நாட்டின் பரவலாக ஊரடங்குச்சட்டம் நோய்த்தொற்றினடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.இது முக்கியமான ஒரு படி எனலாம். இன்றைய கட்டப்பாட்டு நிலைக்கு பிரதான காரணம் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தியமை. 
 
மேல்மாகாணம் யாழ்ப்பாணம் புத்தளம்மன்னார் போன்ற பிரதேசங்களில் தொடர் ஊரடங்குச்சட்டமும் ஏனைய 19மாவட்டங்களில் விட்டுவிட்டு ஊரடங்கும் அமுலாகிவந்தது. தற்போது அது கொழும்பு ஹம்பகா களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த 21மாவட்டங்களில் இரவுநேர ஊரடங்கை அமுல்படுத்திவருகிறது.
அவ்வப்போது சிலபகுதிகள் முற்றாகவே முடக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துத்தடை அமுலாகியுள்ளன.
 
மேலும் சமுகஇடைவெளி பேணப்படுவதன் அவசியமும் முகக்கவசம் அணிவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டு போதிய விழிப்புணர்வுகள் சகல மட்டங்களிலும் பரப்பப்பட்டுவருகின்றன.
சகலஅலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் ஒன்றுசேர்வது மதசடங்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
இவை இலங்கையில் கொரோனாவை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவியிருக்கிறதெனலாம்.
 
பாடசாலை விவகாரம்.
 
கொரோனாத்தொற்று என்பது அண்மைக்காலமாக அதிகரித்துவருவதும் அது படையினரிடையே ஊடுருவிவருவதும் அரசாங்கத்திற்கு சவாலான விடயமாகப் பார்க்கப்படுகிற்றது.
விடுமுறையில்சென்ற படையினரை மீண்டும் அழைப்பதற்காக கடந்த தங்கட்கிழமை முழுவதும் நாடளாவியரீதியில் ஊரடங்கு உத்தரவு திடீரென முன்னறிவித்தலின்றிப் பிறப்பிக்கப்பட்டதனையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.
 
அதன் ஓரங்கமாக பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றி தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக்கண்காணிப்பது என்று கூறப்பட்டது.
அதன்படி கொழும்பில் பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரி தேர்ஸ்ரன் கல்லூரி இந்துக்கல்லூரி போன்ற பல பாடசாலைகளை இராணுவம் பொறுப்பேற்கவிருப்பதாகவும் வடக்கில் யாழ். கோப்பாய் தேசியகல்வியியல்கல்லூரி முல்லைத்தீவில் சில பாடசாலைகள் பொறுப்பேறறு; இராணுவம் விரைந்ததாகவும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.
 
ஆனால் இச்செய்திகளெல்லாம் வெறும் பொய் போலிப்பிரச்சாரம் என்கின்ற ரீதியில் இராணுவத்தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சவேந்திரசில்வா ஊடகங்களுக்கு ஆணித்தரமான அறிக்கையை விட்டிருந்தார்.
கூடவே கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில் பாடசாலைகள் முகாம்காளக மாற்றப்படாது என்று பேசியிருந்தார்.
 
இராணுவத்தளபதி தனது அறிக்கையில்
தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்தப்பாடசாலையும் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாகக்கூறுகின்றோம். இவ்விடயம்தொடர்பில் அநாவசியமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. என்னிடமும் பலர் இதுதொடர்பில் வினவினர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாகக நாம் எதிர்பார்க்கவில்லை.
 
எனினும் நாம் கடந்த இருதினங்களில் சிறியபாடசாலைகள் குறிப்பாக இராணுவமகாம்களுக்கு அருகில் காணப்படும் சில  பாடசாலைகளைத்தருமாறு கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவ்வாறு வழங்கக்கூடிய பாடசாலைகள்தொடர்பில் கல்வியமைச்சரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
சமுகஇடைவெளியை இராணுவத்தினர் பேணுதலில் உள்ள சவால்களை முறியடிக்க சிறுசிறு முகாம்களை அமைக்கவேண்டிய கட்டாயதேவையுள்ளது. நெருக்கடிமிகுந்த முகாம்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. அங்குள்ள இராணுவவீரர்களை இலகுவாக தங்கவைக்கவே சில பாடசாலைகள் கோரப்பட்டனவே தவிர தனிமைப்படுத்தல் செய்றபாட்டிற்கல்ல.
 
எனவே தனிமைப்படுத்தல்நிலையங்களான பாடசாலைகளை நாம் எடுக்கப்போவதில்லை.அதுதொடர்பில் மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லை என்றார்.
இராணுவத்தளபதியின் இந்த அறிக்கை கல்விச்சமுகம் குறிப்பாக குறித்த பாடசாலைகளை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல்தரும் செய்தியாகவிருக்கின்றது.
இருப்பினும் சமகாலத்தில் இவ்வாறான செய்திகளும் இடம்பிடிக்கின்றன.
 
அதேவேளை இப்படியும் நடக்கிறது.
 
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் 11 பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்திருக்கிறார்.
 
கல்முனைப்பிராந்தியத்தில் நான்கு பாடசாலைகளும் திருமலைப்பிராந்தியத்தில் நான்கு பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் மூன்று பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
 
கல்முனைப்பிராந்தியத்தில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் அக்கரைப்பற்று சென்ஜோன்ஸ் வித்தியாலயம் பாணமை தமிழ்மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.
 
திருகோணமலைப்பிராந்தியத்தில் மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் பாடசாலை ரொட்டவேவ முஸ்லிம் வித்தியாலயம் மொறவேவ சிங்கள மகாவித்தியாலயம் புல்மோட்டை கனிஜாவலி சிங்கள மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முகாம்களாக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
 
அம்பாறைப்பிராந்தியத்தில் பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம் உகன ஹிமிதுறவ வித்தியாலயம் உகன கலகிட்டியாகொட மகாவித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.
 
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏழு பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வியமைசசின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
 
எதிர்ப்பலைகள்.
சமகாலத்தில் எழுந்துள்ள இப்பாடசாலை விவகாரச்செய்திகளின் உண்மைத்தன்மை எத்தகையது என்பதற்கு அப்பால் சில அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கருத்துக்களையும் தெரிவித்திருக்கின்றனர்.
 
குறிப்பாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொரோனாத்தடுப்புக்காக பாடசாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். இந்நடவடிக்கை வடக்கு கிழக்கு மக்கள்மத்தியில் மேலும் அச்சம் ஏற்பட வழிசமைக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இராணவத்தினர் தங்குவதற்கு பாடசாலைகள் உகந்ததல்ல. அவ்வாறு மாற்றுவதனால் பாடசாலையைச்சூழவுள்ள மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாவார்கள். இளம்சந்தததியினர் கிருமிகளுள்ள இடத்தில் கல்விகற்பதை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே அரசாங்கம் பாடசாலைகளை இவ்விதம் மாற்றக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை புளொட் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆசிரியர் பா.கஜதீபன் கல்முனை மாநகரசபைஉறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோh இதுவரை தமது கண்டன எதிர்ப்பலைகளை வெளியிட்டுள்ளனர்.
 
நாட்டின் சமகாலநிலைமை கருதி இன்னும் பலர் மௌனமாக இருந்து எதிர்க்கின்றனர்.
 
ஜனாதிபதியிடம் வேண்டுகோள்.
கல்முனை மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது வேண்டுகோளில்  குறிப்பிட்டுள்ளதாவது:
 
கிழக்கில் 11பாடசாலைகள் தனிமைப்படுத்தல்நிலையங்களாக மாற்றப்படுகின்றன. அவற்றுள் கல்முனை உவெஸ்லிக்கல்லூரியும் ஒன்றாகும் என அறியக்கிடைத்தது.
கல்முனை மாநகரின்மத்தியில் மூவினமாணவர்களும் கல்விபயிலும் பாரம்பரியமான உவெஸ்லி உயர்தரக்கல்லூரி ஜனசந்தடிமிக்க பகுதியிலமைந்துள்ளது.
 
இப்பாடசாலையைச்சுற்றி கல்முனை பிரதான சந்தை தேவாலயம் பெண்கள்காப்பகம் மைதானம் கடைத்தொகுதி கடைத்தெரு பொலிஸ்நிலையம் மாநகரசபை பிரதேசசெயலகம் போன்ற முக்கியமான இடங்கள அமைந்துள்ளன.
எந்நேரமும் மக்களால் நிரம்பிவழிகின்ற பகுதியிலமைந்துள்ள இப்பாடசாலையை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதென்பது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
 
உண்மையில் அரசாங்கம் கொரோனாத்தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்கொண்டுவருகிறது. அதற்கு எமது பாராட்டைத்தெரிவிக்கிறேன்.
அதேவேளை பாடசாலைகளை இந்தநோக்கத்திற்காக எடுக்கமாட்டோம் என இராணுவத்தளபதி கல்வியமைச்சர் ஆகியோர் ஏலவே ஊடகங்களில் கூறியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
 
இக்கல்லூரியில் இராணுவவீரர்கள் சமுக இடைவெளியைப் பேணுவதில் சிரமமுள்ளது. வருங்கால சந்ததிகள் பயில்கின்ற இப்பாடசாலையில் கொரோனா தொடர்புடைய நிலையங்களை அமைப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
 
மறுபரிசீலனை வேண்டும்.
இவ்வாறாக அரசஉயர்மட்டங்களில் வேறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் பெரும்குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.
ஏலவே கொரோனா அச்சத்தில் கிலியுடன் வாழ்ந்துவரும் மக்களுக்கு இச்செய்தி  மேலும் அச்சத்தை உண்டுபண்ணும் என்பதில் வியப்பில்லை.
 
பாடசாலை என்பது வருங்கால சந்ததிகள் பயிலும் அரங்கு. அவை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணப்படவேண்டியவை. அரசாங்கமும் பெற்றோரும் அனைவரும் தமது பிள்ளைகளைப்பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் மனைவி ஆசிரியை 3பிள்ளைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடசாலையில். பாடசாலை ஆரம்பமாகின்றபோது கொரோனாதனிமைப்படுத்தலுக்கான பாடசாலைகள் தொற்றுநீக்கி பலவாரங்களுக்குப்பின்புதான் திறக்கப்படவேண்டும். அங்கு பயிலும் இவர்களில் இருவர் பாடசாலைக்கு செல்லமுடியாதநிலை. அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வது? என்பதில் திண்டாட்டம்.
 
இராணுவத்தைத் தங்கவைப்பதற்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு தற்காலத்தில் பய்னபடுத்தப்படாமலிருக்கின்ற பெரிய பெரிய ஹோட்டல்கள் விடுதிகள் கல்யாணமண்டபங்கள் விடுதிகள் பொருத்தப்பாடாக இருக்கும்.
 
ஆங்காங்கே சில பிரதேசங்களில் பாரிய அரசகட்டடங்களுள்ளன. குறிப்பாக மேல் தென்பகுதிகளில் கூடுதலாகக்காணப்படுகின்றன.
 
சீனா போன்ற நாடுகளில் ஒருநாளில் அல்லது நான்குநாட்களில் 1000கட்டில்களைக்கொண்ட வைத்தியசாலைகளை அமைப்பது எமதுசிறிய நாட்டில் சிரமம் என்றாலும்   தியத்தலாவையில் அமைக்கப்பட்டதுபோன்று தற்காலிக முகாம்களை அமைத்தலும் சாலப்பொருந்தும்.
 
குறிப்பாக ஜனசந்தடிமிக்க மக்கள் செறிந்துவாழ்கின்ற பிரதேசங்களலுள்ள பாடசாலைகளை முற்றாகத்தவிர்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் படையினர் சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்பான விலைமதிக்கமுடியாத மனிதாபிமான சேவைகளை யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது.
 
படையினர்தான் எமது காவலர்கள். அவர்களும் நிச்சயம் சமுகஇடைவெளியைப்பேணி  சுகாதாரமான தேகாரோக்கியத்துடன் இருக்கவேண்டியதவசியமாகும்.
நல்லபல நடவடிக்கைகளை இதுவரைகாலமும் எடுத்துவந்த அரசாங்கம் அதற்காக கட்டாயம் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும். 
 
எனவே இராணுவத்தளபதியின் அறிக்கைபோன்று பாடசாலைகள் முகாம்களாக மாற்றப்படாமலிருக்க அரசாங்கம் வேறு உத்திகளைக்கையாளவேண்டும்.
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் சிந்தனை இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனபதே கல்விச்சமுகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Related posts