பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், பிரதமர் நியமிக்கப்பட்டதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், பிரதமர் நியமிக்கப்பட்டதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல்இ அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

2015 ஜனவரி 08ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் தூய்மையான அரச முகாமைத்துவத்திற்காகவேயாகும் என தெரிவித்த ஜனாதிபதி அதனை கருத்திற்கொண்டு தான் மிகவும் அறவழியில் பயணத்தை மேற்கொண்டுள்ளபோதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்து 03 மாதங்களாகும் போதே மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்றதன் காரணமாக அந்தப் பயணம் தோல்வியடைந்தது என்றும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் தொலைநோக்கற்றதும் தன்னிச்சையானதுமான நடவடிக்கைகளால் பிரதமரை மாற்றிவிட்டு மக்களுக்கான அறவழியை தேர்ந்தெடுப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தன்னை கொலை செய்வதற்கு முயற்சித்தவர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றால் நாட்டின் நலனை விட தனது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளும் ஊழல் அரசியல்வாதியாக தன்னால் செயற்பட நேர்ந்திருக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி தனது கொள்கை அவ்வாறானதல்ல என்றும் தெரிவித்தார்.

முற்றுமுழுதாக ஊழலுக்கு எதிராக செயற்படுபவன் என்ற வகையில் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயகத்திற்கு மரியாதையளித்து அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியல் கட்டளைகளுக்கு அமைவானது அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி அரசாங்கத்தை நியமித்தல் அரசாங்கத்தை மாற்றியமைத்தல் போன்ற மிக முக்கிய விடயங்களுக்கான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது குரல் மூலமான வாக்கெடுப்புகளை மேற்கொள்வது உகந்ததல்ல என்றும் இலத்திரனியல் வாக்கெடுப்பு அல்லது பெயர் மூலமான வாக்கெடுப்பு போன்ற முறையான நடைமுறைகளை கையாள வேண்டும் என்றும் அது தொடர்பில் தான் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்பட்டமைக்காக தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவ்வாறு செயற்பட்டமைக்கு நன்றியையும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அது தொடர்பாக தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது அதாவது 2015 முதல் 2018 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி நிதி மோசடி போன்ற ஊழல்இ மோசடிகள்இ முறைக்கேடுகள் தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் குறித்த ஊழல்இ மோசடிஇ முறைக்கேடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Related posts