பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அதிஉச்சதண்டனை வேண்டும். மலையகம்-கிழக்கு உள்ளுராட்சி பெண்ணுறுப்பினர்கள் சந்திப்பில் சீற்றம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் பகிடிவதையிலீடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உச்சக்கட்டத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இவ்வாறு மலையகம்  மற்றும் கிழக்கு உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் சந்திப்பின்போது அவர்கள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
முதற்கட்டமாக மலையகத்தின் கண்டி மாவட்டத்தைச்சேர்ந்த பன்விலை பிரதேசசபை பெண்ணுறுப்பினர்களும் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த காரைதீவுப்பிரதேச சபை உறுப்பினர்களும் இடையே பரஸ்பரம் கருத்துப்பரிமாறும் சந்திப்பு நேற்று காரைதீவில் இடம்பெற்றது.
 
சர்வதேச பெண்ணுரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவியுமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஏற்பாடு செய்த இந்த முதலாம்கட்டச்சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேசசபையில் நடைபெற்றது.
 
கண்டி பன்விலை பிரதேசசபை பெண்ணுறுப்பினர்களான எஸ்.விஜயமாலா கே.சர்மிளா எஸ்.பிரமிளா மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் எஸ்.தாரணி  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பெண்ணுறுப்பினர் சின்னையா ஜெயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
அரசியலில் பெண்களின் 25வீத உறுப்புரிமையுடனான பங்களிப்பு அபிவிருத்தி தொடர்பில் பிரதேசவாரியாக எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது தொடர்பில் பரஸ்பரம் கருத்துகள் பரிமாறப்பட்டன.
 
காரைதீவு பிரதேசசபை பெண்ணுறுப்பினர் ஜெயராணி தம்மைப்பொறுத்தவரை நிதியொதுக்கீடு முதல் சகல செயற்பாடுகளிலும் தான் சம்பந்தப்படுவதாகவும் பெண்ணுரிமை பேணப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
அதனையிட்டு தலைவி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் மற்றும் உறுப்பினர்கள் சபைத்தவிசாளர் ஜெயசிறிலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
 
பெண்கள் நாட்டின் கண்கள் ஆனால் அவர்களது மானத்தை வைத்து அவர்களது செயற்பாடுகளை மழுங்கடிக்கப்பார்க்கிறார்கள். அதற்கு இடமளிக்கக்கூடாது. நாம் கிழக்கு வடக்கு மலையகம் எனப்பிரிந்துசெயற்படாமல் அனைவரும் குறிப்பாக சிறுபான்மையின பெண்ணுறுப்பினர்கள் ஒரேகுடையின்கீழிணைந்து செயற்படமுன்வரவேண்டும் எனப் பொதுவாக பலரும் எடுத்துரைத்தனர்.
 
பாலியல் பகிடிவதை தொடர்பில் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் கூறுகையில்:
 
கற்றறிந்த சமுகம் மிகவும் வெட்கப்படவேண்டிய விடயமிது. இத்தோடு இச்சம்பவம் முற்றுப்பெறவேண்டும். இது தொடர விடக்கூடாது.அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக்கூறியுள்ளது. தப்புச்செய்தவன் தண்டிக்கப்படவேண்டும். அதில் தயவுதாட்சண்யம் காட்டப்படக்கூடாது.என்றார்.
 
இதேபோன்று கல்முனையில் தாதிய சிரேஸ்ட பெண் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல்ரீதியிலும் நிருவாக அராஜகரீதியிலும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியையறிகிறோம். பெண் என்ற காரணத்தினால் இந்த அடக்குமுறையைப்பிரயோகித்துள்ளனர் எனத்தெரிகிறது.
 
சுகாதார அமைச்சு சுகாதாரதிணைக்களம் மனிதஉரிமைகள் ஆணைக்குழு இதற்கு தக்க நீதி வழங்கவேண்டும். பாலியல்இம்சை புரிந்ததாகக்கூறும் தாதியர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.மேலும் நிருவாகத்தை பாரபட்சமாக செய்த அதிகாரிக்கு சட்டரீதியாக ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்கவேண்டும். தவறினால் இலங்கைபூராக பெண்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெறும். சர்வதேச அமைப்புகளுக்கும் அறிவிப்போம். என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts