பிரதேசசபையின் பாதீடு இரண்டாவது முறையாகவும் தோற்கடிப்பு…

மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்யை தினம் பாதீடு தொடர்பிலான விசேட அமர்வு பிரதேசசபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பதினேழு உறுப்பினர்களைக் கொண்ட மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் பாதீடு தொடர்பிலான நேற்றைய அமர்விற்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். 
 
2020ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தவிசாளரினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது தவிசாளர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு உறுப்பினர்கள் உட்பட மூவர் மாத்திரமே வரவு செலவு அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். வரவு செலவு அறிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினருமாக ஏழு உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். அதற்கமைவாக 04 மேலதிக வாக்குகளால் வரவு செலவு அறிக்கை தோற்கடிக்கப்பட்டது.
 
சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும், முஸ்லீம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு உறுப்பினர்களுமாக ஆறு உறுப்பினர்கள் சபை அமர்விற்குச் சமுகம் தரவில்லை.
 
இதேவேளை சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தின் போது வெள்ள அனர்தத்தினால் பாதிப்புற்றுள்ள மக்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக பிரதேசசபை உறுப்பினர் நகுலேஸ்வரன் அவர்களினால் விசேட பிரேரணை முன்வைக்கப்பட்ட போது வரவுசெலவு அறிக்கை வாக்கெடுப்பு முடிவுற்றதும் கருத்திற் கொள்ளப்படும் என்று தெரிவித்த தவிசாளர் வரவு செலவுத் திட்டம் தோல்வியுற்றதும் மற்றைய விடயங்கள் பற்றியும் பாதிப்புற்ற மக்கள் தொடர்பிலான முக்கிய பிரேரணை தொடர்பிலும் அக்கறை கொள்ளாது சபை நடவடிக்கைகளை நிறைவுற்றுச் சென்ற விடயம் தொடர்பில் உறுப்பினர் விசனம் வெளியிட்டார்.
 
இதன்படி மண்முனைப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இரண்டாவது முறையாகவும் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts