பிரான்ஸில் ஈழத்து தமிழ் மன்னர்களின் குறும்பட வெளியீட்டு விழா

பிரான்சில் நாட்டில் வன்னி இராச்சியத்தின் இறுதிக் காவலன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படமும், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனின் மண்டியிடா வீரம் குறும் படமும் வெளியீட்டு விழா உணர்வு பூர்வமாக நேற்று மாலை நடைபெற்றது.

 
  பாரிசில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றைய தினம் வன்னி இராச்சியத்தின் இறுதிக் காவலன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படமும், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனின் மண்டியிடா வீரம் ஆகிய இரண்டு குறும்படங்களும் நூற்றுக்கணக்கான மக்களின் முன்னிலையில் பெருமையுடன் வெளியீடு செய்யப்பட்டது. 
 
இந்நிகழ்வை திருமதி.அனுசியா ஆனந்தரூபன் அவர்கள் திறம்பட தொகுத்து வழங்கினார். இணுவையூர் அப்பாக்குட்டி நிலையம் (இங்கிலாந்து) தயாரிப்பில், சட்டத்தரணி சுப்பிரமணியம் ஸ்ரீ காந்தலிங்கம் அவர்களின் நெறியாள்கையில், அவரால் நடித்து உருவான மேற்படி இரண்டு வரலாற்றுக் குறும் படங்களும் தமிழன் வரலாற்றைப் பறை சாற்றி நிற்கிறது. தமிழன் வரலாற்றுச் சிறப்பை, இளம் தலைமுறையினருக்கு எடுத்து சொல்லும் விதமாக இவ்விரண்டு குறும்படங்களும் அமைந்திருப்பது சாலச்சிறந்தது. 
 
மூத்த நாடக கலைஞரும், உடல் சஞ்சிகையின் ஆசிரியரும்,சர்வதேச தமிழ் நாடக விழாவின் அமைப்பாளருமான திரு.மனுவேல்பிள்ளை அரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து அகவணக்கத்தையடுத்து , கலாலயா கலைக் கல்லூரி மாணவிகளால் தமிழ்த்தாய் வாழ்த்தும், வரவேற்பு நடனமும்,  வரவேற்பு நடனத்தைத்தைத் தொடர்ந்து அனைவரையும் ஊருக்கு அழைத்துச் சென்ற வசந்தன் கூத்து கட்டுவன் கலைஞர்களால் சிறப்பாக மேடையேற்றப்பட்டது.     
 
தொடர்ந்து, கலாலயம் கலைக் கல்லூரி அதிபர்.  பரதசூடாமணி திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றதுடன் சர்வதேச தமிழ் நாடக விழாவின் அமைப்பாளர்    திரு.மனுவேல்பிள்ளை அரியநாயகம் அவர்களின்தலைமை உரை இடம் பெற்றது. தொடராக …  சமூக சேவையாளரும், திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளருமான திரு . குகன் குணரெத்தினம் அவர்களும், யூனியன் கல்லூரி பழைய மாணவர்சங்க (பிரான்ஸ்) செயலாளர் திரு. மாவை இளையதம்பி கந்தசாமி அவர்களும் சிறப்புரைகளை வழங்கினார்கள்.   
 
சிறப்புரைகளைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து வருகை தந்த  வசந்தன் கூத்தின் முன்னோடியும் அண்ணாவியுமான திரு.ஐயாத்தரை பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் மதிப்பளிப்பு இடம் பெற்றது.. சட்டத்தரணி ஸ்ரீ காந்தலிங்கம் அவர்கள் அண்ணாவியாரின் அன்றைய ஞாபகங்களை விரிவாக எடுத்து விளக்கி ஒரு கலைஞனுக்குச் செய்யும் மரியாதையை வழங்கினார். 
 
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வன்னி இராச்சியத்தின் இறுதிக் காவலன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படமும், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனின் மண்டியிடா வீரம்  ஆகிய  குறும்படமும் திரையிடப்பட்டன.     குறும்படங்கள் திரையிட்ட பின்னர், நாம்தமிழர் கட்சி திரு. சீமான் அவர்களின் ஆசியுரை காணொளி மூலம் திரையிடப்பட்டது .  
 
    நாடக இயக்குநரும் மாகாஜனக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவருமான திரு. சின்னத்துரை மனோகரன் அறிமுக உரையை நிகழ்த்தினார். அதனைக் தொடர்ந்து கலைஞர் திரு. வேல்முருகன் கெங்கேஸ்வரன் அவர்களும்பாரிஸ் கலாலயக் கலைக் கல்லூரி ஆசிரியர் திருமதி. வாணி தியாகராஜா அவர்களும், ஊடகவியலாளரும் தமிழ் ஆசிரியருமான திரு. இரா தில்லைநாயகம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.   
 
இறுதியாக குறும்படங்களின் நெறியாளரும், நடிகரும், சட்டத்தரணியுமான திருவாளர் சுப்பிரமணியம் ஸ்ரீ காந்தலிங்கம் அவர்கள் நன்றியுரையையும், ஏற்புரையையும் வழங்கினார்.   வாழ்த்துரைகளைத் தொடர்ந்து,   இறுவெட்டுக்களை திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களும், திருமதி பத்மா ஸ்ரீ காந்தலிங்கம் அவர்களும் வெளியிட்டு வைக்க முதல் இறுவெட்டை அண்ணாவியார் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும் அவரது பாரியாரும் பெற்றுகொண்டனர்.
 

Related posts