புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆட்பாட்டம்

புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் இன்று சனிக்கிழமை(11)காலை 9.30 மணியளவில்  இடம்பெற்றது.
 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியீட்டார்கள்.இதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் “ஊடகத்துறையை நசுக்காதே,”ஊடகத்துறையின்மீது கட்டவீழ்த்தப்பட்ட  அராஜகத்தை நிறுத்து”,”ஊடகவியலாளர் மீது அச்சுறுத்திய குற்றவாளியை கைதுசெய்”, “வேண்டாம் வேண்டாம் ஊடக அடக்குமுறை வேண்டாம்”, என ஆட்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எதிர்ப்பை வெளியீட்டார்கள்.

இதன்போது கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

ஊடகங்கள் காலங்காலமாக நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டே தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றன. இவ்வாறான நெருக்கடிகளற்ற ஒரு ஊடகக் கலாசாரம் உலகளவில் அமைந்துவிடவேண்டுமென்பதில் ஊடகக்காரர்களும், ஊடகங்களும், பல்வேறு அமைப்புகளும் ஆர்வலர்களும் முயன்று கொண்டிருந்தாலும் அது சாத்தியமற்றதாகவே அமைந்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் (10) கொழும்பில் ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால்  அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.
இச் சம்பவம், தற்போதைய நேரத்தில் அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதற்கு அல்லது தவிர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொண்டாகவேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.

மக்களின் தகவல்சார் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், தகவல்களை அறிந்து கொள்கின்றதற்கான உரிமையைப் பாதுகாக்கவுமென செயற்படுகின்ற ஊடகக் காரர்களை அச்சுறுத்துவதும் நெருக்கடிக்குள்ளாக்குவதும் இல்லாமலாக்கப்பட்ட ஒரு சுமூகமான சுதந்திரமான ஊடகத்துறைக்கான அனைத்து சுதந்திரங்களையும் பேணுவதற்கான ஏற்பாடுகள் நாட்டில் மாத்திரமல்ல உலகளவிலும் தேவைப்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம் மற்றும் வன்முறைகள் நிலவிய காலங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நாட்டைவிட்டு புலம்பெயரவேண்டிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டதுடன், சுதந்திரமான ஊடுகப்பணியினைத் தொடரமுடியாமல் ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சமூகம் சார் பணிகளில் ஒன்றாகக்கருதப்படுகின்ற ஊடகத்துறையில் பணியாற்றிவருகின்றவர்களுக்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தினையும் பேணும் வகையிலான நடவடிக்கைகள், சட்ட ஏற்பாடுகள் சரியான வகையில் ஏற்படுத்தப்படுகின்றமையின் மூலமே சாத்தியப்படலாம்.
ஊடகங்கள், ஊடகக்காரர்கள் மீதான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றவர்கள் சரியானமுறையில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படுவதுடன். அதற்கான தண்டனைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அமுல்படுத்தப்படவும் வேண்டும். அதன் மூலமே உலகளவில் அங்கீகாரமுள்ள ஊடகத்துறை பாதுகாப்பும் அதற்கான கௌரவமும் பேணப்படும் என்பதில் ஐயமில்லை.
அந்தவகையில் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாத வண்ணமான ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் குரல் கொடுப்பதும்  நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காகப்பாடுபடுவதும் ஊடகம் சார் அக்கறையுள்ள ஒவ்வொருவரதும் பணியும் கடமையுமாகும் எனத் தெரிவித்தார்.

Related posts