புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை வறிய மாணவர்களுக்கு வசதி படைத்த பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினை பெறும் பெரும்பாலான மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்ல என புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அதனால் புலமைப்பரீட்சை இன்று ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பிரசித்தி பெற்ற பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டா போட்டிகளுக்குப் பதிலாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவற்றை பௌதீக ரீதியிலும் தர ரீதியிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அப்பொறுப்பினை அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 140 மில்லியன் ரூபா செலவில் ஐயாயிரம் ஆசனங்களைக் கொண்ட மைத்ரி கைவினை கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பொலன்னறுவை றோயல் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்ற வகையில் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக தம்மாலான அனைத்து கடமைகளையும் தாம் பூர்த்தி செய்திருப்பதாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் அவ்வளங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியது தற்கால மாணவ சமூகத்தின் பொறுப்பாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு,பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரனசிங்க, வித்தியாலய அதிபர் ரவி லால் விஜயவங்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Related posts