பெருங்கடலை படகு இல்லாமல் வெறும் ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது தாத்தா

பிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற பேரல் (பீப்பாய்) மூலம் கடக்கத் துவங்கியுள்ளார்.

படகுகளில் பொருத்தப்படும் இன்ஜின் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்திதான் இந்த கொள்கலன் மூலம் 4500 கிமீ தூரத்தை கடக்கப்போகிறார்.

தேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போல ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி ஓடும் நீர்ப்பரப்பு ‘பெருங்கடல் நீரோட்டம்’ எனப்படும்.

பிரான்ஸைச் சேர்ந்த 71 வயது ஜீன்-ஜாக்குவஸ் சவின், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கிளம்பியிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை அடையமுடியும் என நம்புகிறார்.

இந்த வலுவான கொள்கலனுக்குள் உறங்குவதற்கு தனி இடம் உள்ளது. சமையலறை மற்றும் பொருட்களை வைப்பதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலடியின் நீரோட்டங்கள் குறித்து கடலியலாளர்கள் அறிவதற்காக, ஜீன்-ஜாக்குவஸ் சவின்தான் செல்லும் வழியில் குறிப்பான்களை போட்டுவிட்டுச் செல்வார்.

தனது பயணம் குறித்த மேலதிக தகவல்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதன்படி கடைசியாக அவர் வெளியிட்ட ஒரு பதிவில் பேரல் நன்றாக ஒத்துழைக்கிறது என்கிறார்.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி பேட்டியொன்றில் பேசிய ஜீன், ”காலநிலை நன்றாக இருக்கிறது. மணிக்கு 2-3 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வரை சாதகமான வகையில் காலநிலை நிலவுகிறது” என்றார்.

ஜீன்-ஜாக்குவஸ் சவின் ஒரு முன்னாள் ராணுவ பாராசூட் வீரர். மேலும் வனச்சரக அலுவலராகவும், விமானியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

பிசின் பூசப்பட்ட தனது பிளைவுட் கொள்கலன் மூலம் 4500 கி.மீ தொலைவில் உள்ள கரீபியன் தீவுகளைச் சென்றடைய கடலடி நீரோட்டங்கள் மட்டுமே போதுமானவை என நம்புகிறார்.

இந்த பேரல் சுமார் மூன்று மீட்டர் நீளம் கொண்டது. மேலும் 2.10 மீட்டர் அளவுக்கு அகலமும் ஆறு சதுர மீட்டர் அளவுக்கு தங்குமிட வசதியும் கொண்டிருக்கிறது. இதன் தரையில் கப்பல் சாளரம் உள்ளது. இதன் மூலம் கடலில் தனது கொள்கலனை கடந்து போகும் மீன்களை ஜீன்-ஜாக்குவஸால் பார்க்கமுடியும்.

Related posts