பெரும்போக நெற் செய்கை அறுவடையினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தல் தொடர்பான கலந்துரையாடல்.

மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமானது பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலே நேற்று முன்தினம்(18) இடம்பெற்றது.
 
இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே 35 ஆயிரத்தி 460 மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாகவும் பொருத்தமான முறையில் உலர்த்தப்பட்ட 1 கிலோ சம்பா/கீரி சம்பா ரூபாய் 52 ற்கும் 1 கிலோ நாட்டரிசி ரூபாய் 50 ற்கும் விவசாய அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக  கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 7823 மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்ய அரச நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இது வரை காலமும் மட்;டக்களப்பு மாவட்டத்தில் 2500 மெற்றிக் தொன் நெல்லினை மாத்திரமே அரச நெல் சந்தைப் படுத்தல் சபை கொள்வனவு செய்து வந்தது. விவசாயிகளினதும் நுகர்வோரினதும் நன்மை கருதியே இம் முறை அதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய அரச நெல் சந்தைப் படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
 
இக் கலந்துரையாடலில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை எவ்வாறு களஞ்சியப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு மட்டகளப்பு மாவட்டத்தில் போதியளவு இடமின்மையினால் நெல் களஞ்சியப்படுத்துவதற்குரிய இடங்கள் சில இனங்காணப்பட்டு தெரிவு செய்யப்பட்டன.
 
14 தொடக்கம் 22 வீதமான ஈரப்பதனை கொண்ட நெல்லினையே அரச நெல் சந்தைப் படுத்தல் சபை கொள்வனவு செய்யும். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடனான காலநிலையால் நெல்லினை உலர்த்துவதில் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச நெல் சந்தைப் படுத்தல் சபை உத்தியோகத்தர் பற்றாக்குறை என்பன பற்றியும் ஆராயப்பட்டது.
 
இம் முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்தி 74 ஆயிரத்தி 919.75 ஏக்கர் வயல் நிலத்தில் 48 ஆயிரத்தி 394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 2 இலட்சத்தி 65 ஆயிரத்தி 666 மெற்றிக்தொன் நெல் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர்/மாவட்ட செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே. ஜெகநாத், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு. தங்கவேல், நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பெரும்போக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts