பொதுத் தேர்தல் கடமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6127 அரச உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய 3 தொகுதிகளிலுமாக தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்தி 127 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 
இத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச உததியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் நிறைபெற்று எதிர்வரும் 14, 15 ஆந்திகதிகளில் வாக்களிக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்தேர்தலினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக   409808 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கென 428 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 
 
இம்மாவட்டத்தில் தேர்தல் கடமைகளை இலகுவாகக் கண்காணிப்பதற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதி 194 வாக்குச் சாவடிகளைக் கொண்ட 32 வலயங்களாகவும், கல்குடா தொகுதியில் 119 வாக்குச் சாவடிகளைக் கொண்ட 22 வலயங்களாகவும், பட்டிருப்புத் தொகுதி 115 வாக்குச்சாவடிகளைக் கொண்ட 20 வலயங்களுமாக மொத்தம் 428 வாக்குச் சாவடிகள் 74 வலயங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்குத் தெரிவித்தர்.
 
இத்தேர்தலில் 428 வாக்களிக்கும் நிலையங்களுக்குமாக 76 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் 451 சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களும், 974 கனிஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களும் 2524 எழுதுனர்களுமாக 4025 வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுதவிர விநியோகம் மற்றும் பொறுப்பேற்கும் பிரிவு, விசேட பிரிவுகள், அறிவிப்பு, ஒருங்கிணைப்பு ஆகிய பிரிவுகளுக்கும், மண்டபப் பொறுப்பு உட்பட காத்திருப்புக்குமாக 685 உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
 
மேலும் வாக்கெண்ணும் கடமைகளுக்காக 67 வாக்கொண்ணும் நிலையங்களுக்காக  67 பிரதம கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களும், 214 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும், 449 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும், 620 கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும், 134 அலுவலக பணியாட்களுமாக 1417 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts