போருக்கு பின்னர் இராணுவத்தால் ஏதேனும் ஆலயங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் சீரமைத்து தருவோம்

 
     

யாழ். மாவட்டத்தில் உள்ள போதிய வசதி அற்ற, வருமானம் குறைந்த இந்து ஆலயங்களின் புனர்நிர்மாணத்துக்கு உதவுகின்ற வேலை திட்டத்தின்  கீழ் அடுத்த வாரம் முதல் மணல், சீமெந்து ஆகியன உதவி கோரிய ஆலயங்களுக்கு இராணுவத்தின் யாழ். கட்டளை தலைமையகத்தால் வழங்கி வைக்கப்படும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உதவி கோரிய ஆலயங்களின் தலைவர்கள், நிர்வாக சபை  உறுப்பினர்கள் ஆகியோரை யாழ். கட்டளை தலைமையகத்தில் நேற்று மதியம் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தின் பல இடங்களில் சுமார் 20 இற்கும் அதிகமான ஆலயங்களில் இருந்து பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு-
இவை முதலாம் கட்ட உதவிகள் ஆகும். இவ்வுதவிகளை பயன்படுத்தி ஆலயத்தை நீங்கள் நிச்சயம் பகுதியளவிலேனும் மேம்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன். அத்துடன் உங்கள் வேலைகளை நாம் நேரில் வந்து பார்வையிடுவோம் என்பதையும், உங்கள் வேலைகளில் நாங்கள் திருப்தி அடைகின்ற பட்சத்தில் மேலதிக உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்கி வைப்போம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.
மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பாக கடந்த மூன்று வருட கால பகுதியில் ஏதேனும் ஆலயங்கள் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக உண்மையிலேயே பகுதியளவிலோ, முழுமையாகவோ பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவிலேயே சரி செய்து தருவோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.
தேர்தல் நோக்கத்துக்காகவோ, அரசியலுக்காகவோ நாம் இதை செய்யவில்லை. மாறாக ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்பவும், மேம்படுத்தவுமே இவ்வாறான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். எமது வேலை திட்டங்களில் புலம்பெயர் தமிழர்கள் அடங்கலாக அனைத்து தமிழ் தரப்பினர்களும் பங்காளிகளாக இணைதல் வேண்டும் என்று இத்தருணத்தில் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.
உதவி தேவைப்படுகின்ற ஆலயங்களை சேர்ந்தவர்கள் 0702095920 என்கிற கையடக்க தொலைபேசி இலக்கம் மூலமாக தொடர்பு கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.

Related posts