மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நட்புறவு மேம்பட செயற்பட வேண்டும்

பொதுமக்களின் தேவைகளை கண்டறிந்து பொலிசாரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கு உங்களிடம் சக்தி உண்டு. என்று கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொலிஸ் ஆலோசனை குழு செயலமர்வு  செவ்வாய் கிழமையன்று (17) கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான்மெண்டிஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலைய பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் ஆலோசனை குழு பிரதி நிதிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.

பொலிஸ்மா அதிபர் பூஜீத்ஜெயசுந்தர அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது….

நீங்கள் தான் உங்களது பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு பெரும் சக்தியாகும். இக்குழுவில் சிறந்த நேர்மையான திறமை மிக்க உறுப்பினர்கள் சமூகத்தில் மதிக்க தக்க பிரமுகர்கள் புத்திஜிவிகள்  மத குருமார்கள் சமுகத்திற்காக குரல் கொடுப்போர்கள் இணைந்து செயற்படுகின்றனர். எனவே நீங்கள் எவ்வளவு பெறுமதிவாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்வீர்கள்.

உங்களது பிரதேசத்திலுள்ள மக்களின் குறைபாடுகள் தேவைகள் பிரச்சினைகள் கேள்விகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான விடயங்கள் என்பவற்றை கண்டறிந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து ஆலோசனை வழங்கி அவற்றினை நிவர்த்தி செய்வதன் மூலமே பொதுமக்களுக்கு சேவையாற்ற முடியும்.

பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் குறைபாடுகளை கண்டறிந்து கொண்டால் விமர்சனம் செய்யாமல் சம்பந்தபட்ட பொலிஸ் நிலைய அதிகாரியுடன் கதைத்து அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும். இதேபோன்று சமூக பொலிஸ் குழுக்களிலுள்ள கடமைப்பாடுகளை கண்டறிந்து அவர்களையும் சரியான முறையில் செயற்படுத்தும் கடமையும் உங்களுக்கு உண்டு. சுயாதீனமாகவும் திறம்படவும் கட்சி சார்பற்றவர்களாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

உங்கள் மக்கள் மத்தியிலே இருந்து தான் நீங்கள் அனைவரும் தெரிவு செய்யப்ட்டீர்கள். எனவே பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்ற முன்வரவேண்டும். பிரதேச பொலிசாரினால் பொதுமக்களுக்கான அவசர சேவை தேவைப்படும் போதும் பொதுமக்கள் சார்ந்த தீர்மானம் எடுக்கும் போதும் பொலிசாரை பாதுகாப்பதற்கும் உங்களது ஒத்துழைப்பு அவசியம் தேவையாகவுள்ளது.

பிரதேசத்தின் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நட்புறவு ரீதியிலான ஒரு சிறந்த உறவை ஏற்படுத்தும் ஒன்றியமாக நீங்கள் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts