மட்டக்களப்பில் அடுத்தவாரத்திற்குள் கிலோ ஐம்பது ரூபா அடிப்படையில் நெல் வாங்கப்படும்… ஜனாதிபதி பிரதமர் உறுதி

அரசாங்கம் நெல் கிலோ ஐம்பது ரூபாவுக்கு வாங்கப்படும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தும் மட்டக்களப்பில் இன்னும் அது அமுல்ப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துக் கூறியதையடுத்து உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபை உரிய விலையில் அடுத்த வாரத்திற்குள் வாங்கும் என்ற உறுதி மொழியை அவர்கள் வழங்கியுள்ளார்கள் என மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;;,

மட்டக்களப்பில் தற்போது சர்ச்சையாகவும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம். நெல் விலை குறைவாகக் காணப்படுகின்றமை. அரசாங்கம் நெல் கிலோ ஐம்பது ரூபாவுக்கு வாங்கப்படும் என்ற தீர்மானம் எடுத்திருந்தும் மட்டக்களப்பில் இன்னும் அது அமுல்ப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த நிலைமையினை எடுத்துக் கூறினேன். அவர்கள் இதனை விளங்கி உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபை உரிய விலையில் அடுத்த வாரத்திற்குள் வாங்கும் என்ற உறுதி மொழியை வழங்கியுள்ளார்கள். அத்துடன் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தவிசாளரும் இது தொடர்பில் என்னிடம் உறுதியளித்தார். திறைசேரியும் அதற்கான நிதியை உடனடியாக வழங்க இருக்கின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பிரச்சினையை விவசாயிகள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் பொலனறுவையில் இடம்பெறும் நெல் அறுவடையை வைத்துத்தான் அரசாங்கத்தின் நெல் வாங்கும் செயற்பாட்டைத் தொடங்குவார்கள் என்பது வழமையாக இருக்கின்றது. அங்கு பெப்ரவரி மாதத்தில் தான் அறுவடை மேற்கொள்ளப்படும். இதற்கான ஒரு மாற்றுவழியை உடனடியாகத் தேட வேண்டும் என்ற விடயத்தையும் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அத்துடன் ஜனாதிபதியின் திட்டமிடல் குழுவொன்று மட்டக்களப்பிற்கு வரவும் இருக்கின்றது. 

அதேபோல் எமது விவாசயிகள் நீர்ப்பாசனத்திலும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் மிகவும் அசமந்தப் போக்கில் நீர்ப்பாசனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று நெல் சந்தைப்படுத்தும் சபைக்கான காரியாலயம் கூட மட்டக்களப்பில் இல்லை. இவற்றையெல்லாம் அரசிற்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம். அதற்கான நல்ல தீர்வை ஜனாதிபதியும், பிரதமரும் எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.

எனவே ஐம்பது ரூபா அடிப்படையில் நெல் அடுத்த வாரத்தில் இருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையால் வாங்கப்படும்.

இந்த அரசு தற்போது ஒரு காபந்து அரசாகவே இருக்கின்றது. இது தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைப்பதென்றால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தான் உண்மையான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்க முடியும் என்பது யதார்த்தம். எமது மாவட்டத்தின் சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ற அபிவிருத்திகளை முன்வைக்க வேண்டும்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் கிழக்குத் தமிழர்களுக்கான தீர்வுதான் என்ன. வடகிழக்கு இணைப்பதாயின் எந்த அடிப்படையில் இணைக்கப் போகின்றீர்கள். சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் கிழக்கு மாகாணத்தில் அந்த நிலையை அடைய முடியுமா? வடகிழக்கு இணைய வேண்டும் என்பது தமிழர்களின் அபிலாசை ஆனால் அது இணையாத தருணத்தில் கிழக்கில் மழுங்கிக் கொண்டிருக்கும் தமிழினம் கிழக்கு மாகாணத்தில் என்ன அடிப்படையில் எமது எதிர்காலத்தை முன்வைக்க முடியும். கிழக்குத் தமிழர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசியலிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் இருக்கின்றன. தமிழரசுக் கட்சி வெறுமனே வடமாகாணத்தின் நலன்களை மட்டும கருதாமல் கிழக்கு மாகாணத்தின் நிலையையும் உணர வேண்டும்.

ஜனாதிபதி கூறியிருந்தார் தான் எதிர்பாhத்த அளிவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்று. ஆனால் ஒரு விடயத்தை அவரும் உணர வேண்டும். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் அவருக்கு வாக்களித்தமையினாலேயே அவர் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இல்லாவிடின் அவர் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க மாட்டார். அரசும் பல விடயங்களை உணர வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய கீதம் தமிழில் பாடிவந்தது தான் வழமை. தற்போது அது தொடர்பில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் பிரதமர் அது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் ஒரு தெளிவான விடயத்தை முன்வைக்க வேண்டும். தமிழ் மொழி இலங்கையின் தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் இருக்கின்றது. எனவே தேசிய கீதம் என்ற அடிப்படையில் இந்த அரசு தமிழர்களின் உணர்வை மதித்து செயற்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தி குறித்து பேசும் அரசு தமிழர்களுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். அத்தோடு அரசியற் கைதிகளை விடுவிக்கும் விடயத்திலும் சரியான முடிவுகளை எடுத்து உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாமும் சில யதார்த்தங்களை முன்வைக்க வேண்டும். 13வது திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக அமுல் செய்யப்படவில்லை. காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ஜனாதிபதியும் தயக்கம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு இணைக்கப்படாத சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணததில் காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்து தமிழ் மக்கள் எதனைச் சாதிக்க முடியும். 

அபிவிருத்தி என்று சொல்லுப் போது ஊழல்களும் இருந்ததுதான் வரலாறாக இருந்து வந்துள்ளது. திட்டமிடலில் தொடங்கி அழுல் செய்யும் வரை ஒழுங்கான முறையில் அவை மேற்கொள்ளப்படவில்லை. அவ்விடயத்தில் அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகள் தங்கள் சேவைகளைச் சரியாகச் செய்யும் நிலை இருக்கின்றதா என்ற நிலையை அவர்களே கருத்திற் கொள்ள வேண்டும். எமது மாவட்டத்தில் இருககும் பெரும்பான்மையான அதிகாரிகள் எமது மாவட்டத்தைச சேர்ந்தவர்களே எமது மாவட்டத்தின், மக்களின் நிலையை, அவலங்களை உணர்ந்தவர்கள். அவர்கள் சரியான முறையில் அவர்களின் கடமைகளை முன்னெடுக்காவிட்டால் அதில் பாதிக்கப்படப் போவது பாமர மக்கள் என்பதே யதார்த்தம்.

கிழக்கு மாகாணத்தில் பல சவால்களை எமது மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் இருக்கவும் முடியும் அல்லது தனித்தனியாக இருந்தும் அவர்கள் ஒன்றிணையவும் முடியும். அனைத்தக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை விட தமிழ் மக்களின் தேவை கருதி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை ஒரு கட்சிதான் முன்வைக்க வேண்டும் என்ற ஜனநாயக மரபுக்கு மாறுபட்ட கருத்தோடு தொடர்ந்தும் அரசியல் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்களும் தேவைப்படுகின்றது. தமிழர்களின் தீர்வு என்ற விடயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்துக்களை முன்வைக்கலாம். அதே நேரத்தில் தமிழர்களின் தேவை என்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு திட்டங்களை முன்வைக்க முடியும் என்று தெரிவித்தார்.

Related posts