மட்டக்களப்பில் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிலுள்ள அரச காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பில் இயங்கி வரும் அரச திணைக்களங்கள், மதத்தலங்கள் மற்றும் தனியார் தொழில் முயற்சிகளுக்கான பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை பயன்படுத்துவதற்கான அனுமதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் தலைமையில் காணி பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது. இதன்போதே குறித்த காணிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் வழங்கப்பட்டது.
 
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள பாடசாலைகள், கல்வித் திணைக்களங்கள், சுகாதார சேவை நிலையங்கள், வைத்தியசாலைகள், விவசாய துறைசார்ந்த அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா உட்பட அரச கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகள் மற்றும் தொழில் நிமிர்த்தம் தனியார் பயன்படுத்திவரும் காணிகள் உட்பட மதஸ்தலங்கள் அமைந்துள்ள அரச காணிகளை பயன்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.
 
இதற்கமைவாக பிரதேச செயலாளர்கள், சுற்றாடல் அதிகார சபை, நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் போன்ற சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் முறையான அனுமதி மற்றும் சிபாரிசுடனான முன்மொழிவுகளுக்கமைய குறுகிய கால மற்றும் நீண்டகால குத்தகை மற்றும் தொடர் பாவணைக்காக இவ்வனுமதிகள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.
 
காணிப்பயன்பாட்டுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.எஸ். கிரிசாந்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான முதலாவது காணி பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணையகப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் கரையோர நீர்வள உயிரின வளர்ப்பு அபிவிருத்தி சபை உதவிப் பணிப்பாளர்கள், தொல்பொருள், விவசாயம், வனப்பாதுகாப்பு, வனஜீவி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், காணிப்பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் கலந்து கொண்டனர்.
????????????????????????????????????

Related posts