மட்டக்களப்பில் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

(க. விஜயரெத்தினம்)
இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அஃது சமூகத்தின் கலாசார விழுமியங்களையும் சீர்குலைக்கும் வகையில் யாரும் செயற்படவும் அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் வெளியீட்ட அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்….

கடந்த 21ம் திகதி சித்திரை மாத தாக்குதலுடன் தொடர்பு பட்ட இஸ்லாமிய அடிப்படை வகாப்பிய கொள்கையுடைய தற்கொலை தீவிர வாதியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்ததானது அனைத்து இந்துக்களின் மனங்களிலும் அச்ச உணர்வையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்கின்றோம்.அதனை விமர்சிக்க முயலவில்லை. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச நிருவாகம் மற்றும் அரசியல் தலைவர்களின் நிருவாக திறனற்ற செயற்பாடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய பதற்ற நிலைக்கு காரணமாக அமைகின்றது.

சித்திரை 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முஸ்லீம் தீவிரவாத வகாப்பியக் கோட்பாட்டுத் தற்கொலைதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் அடக்கம் செய்து மத ரீதியான குழப்பத்தினை தோற்றுவித்து விடக்கூடாது.இதற்கு மாறாக இவ்வாறான ஓர் நிலைஏற்பட்டபோது சமயத்தலைவர்களுடன் பேசி சுமூகமாக தீர்வு கண்டிருக்கவேண்டிய மட்டக்களப்பு அரசநிருவாகமும், மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் அசமந்தப்போக்கும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

ஒவ்வொருவரும் தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ளாது இன்னுமொருவர் மீது பந்தை தூக்கிப் போடுவது மட்டக்களப்பின் நிருவாக கட்டமைப்புக்கு உசிதமானதல்ல என்பதனை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
மக்கள் பிரதிநிதி மற்றும் மாவட்ட அரச, அரசியல் நிருவாகம் மக்களுக்கானதே தவிர தமக்கானதல்ல என்பதனை வினைத்திறனுடன் உணர்ந்து செயற்பட வேண்டும்.குறித்த சம்பவத்துடன் ஒப்பியதாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் எதிர்ப்பு வெளிக்காட்டுதலின் மக்களுடன் கலந்துரையாடி குறைகேட்பதற்காக சென்ற எமது கட்சியின் மகளிர் அணித்தலைவியும், மட்டுமாநகர சபை உறுப்பினருமான திருமதி. செல்வி மனோகர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் திருமதி. அ.சுசிகலா ஆகிய இரு பெண் மாநகர சபை உறுப்பினர்களும் பொலிஸாரால் கண்மூடித்தனமாகக் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பல்லின சமூகங்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுடன் வாழ்கின்ற இந்த நாட்டில் சட்டத்திற்கு முரணாக மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் முன்வரவேண்டுமே தவிர அவர்களைத் தாக்குவது எந்தவிதத்தில் நியாயமாகும். பொதுமக்களின் குறைகேட்க மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றுவது சட்டத்திற்கு முரணானதாக அமையாது. அப்படிச் சட்டத்திற்கு முரணான சந்தர்ப்பங்கள் ஏற்படின் அவர்களைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சமாதான உத்தியோகத்தர்கள் (பொலிஸார்) தங்கள் சட்டரீதியான கடமைகளை மீறிப் பெண் என்றும் பாராமல் கண்மூடித்தனமாகத் தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிமீது விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,நாட்டிலே தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவீழ்த்தப்படும் அநியாயங்களை நிறுத்தி தமிழ்மக்களை பாதுகாப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு அமைச்சு முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம் என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வெளியீட்ட கண்டன அறிக்கை யில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts