மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் 32409 குடும்பங்களை சேர்ந்த 105676 பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சியால் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 32409 குடும்பங்களை சேர்ந்த 105676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பாணிப்பாளர் எம்.ஏ.கே.எம்.றியாஸ் திங்கட்கிழமை(27.8.2018) அலுவலகத்தில் வைத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரட்சி சம்பந்தமாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில்:- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான வெப்பமான காலநிலை நிலவுகின்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிக வெப்பத்தினால் வரட்சி  நிலவுகின்றது.வரட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிக் கொண்டிருப்பதுடன் குளங்களின் நீர்மட்டம் குறைவடைவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடை முடிவடைந்துள்ளது.விவசாயிகளின் பாதிப்பைவிட அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள்,நன்னீர் மீன்பிடிப்பவர்கள், வாழ்வாதாரரீதியாக பாதிப்படைய எட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் வரட்சி  கூடிய பிரதேசமாக இருப்பதால் மாட்டத்தில் உள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை,வவுணதீவு,ஏறாவூர் பற்று,கோரளைப்பற்று தெற்கு,கோரளைப்பற்று மத்தி,கோரளைப்பற்று மேற்கு,கோரளைப்பற்று வடக்கு ஆகிய எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 32409 குடும்பங்களைச் சேர்ந்த 105,676 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதேச செயலகங்கள்,பிரதேச சபைகள்,தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை போன்றவற்றின் உதவிகளுடன் குடிநீர் தாங்கிகள் வைக்கப்பட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. வரட்சி சம்பந்தமாக சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கிராமசேவையாளர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ குழுக்களை விழிப்படையச் செய்தும், மக்களுக்கு ஏற்படுகின்ற வரட்சியைப்போக்குவதற்கும்,அவர்களுக்கு கடமையாற்றுவதற்கும் முடிக்கவிடப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

Related posts