மணல் அகழ்வைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம்-ராணமடுப்பகுதியில்

(சா.நடனசபேசன்,மண்டூர் ஷமி )
மட்டு அம்பாரை எல்லைக்கிராமமான போரதீவுப்பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட ராணமடு பூச்சிக்கூடு மூங்கிலாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வதனைக் கண்டித்தும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் அப்பகுதி விவசாயிகளாலும் பிரதேச மக்களாலும் பாரிய ஆர்ப்பாட்டம் 31 திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
வேறு பிரதேசங்களில் இருந்து கனரக மற்றும் உழவு இயந்திரங்களின் மூலம் ஒருசிலர் பூச்சிக் கூடு மூங்கிலாற்றில் மண் அகழ்ந்து அவ் மண்ணை ராணமடுப்பகுதியில் சேமித்துவைத்து வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதனைக் கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டமானது ராணமடு பாலத்திற்கு அருகில் ஆரம்பித்து மண் அகழ்வு இடம்பெறும் பூச்சிக்கூடு மூங்கிலாறுவரைப் பேரணியாகச் சென்றனர் .
துணைபோகாதே துணைபோகாதே மண்கொள்ளைக்கு,சிலரது சுகபோகத்திற்கு எமது வளத்தையும் வாழ்வையும் சுரண்டாதே, எமது தேவைக்கு மணலைப்பெற நவகிரிக்குச்செல்லவேண்டும் ஆனால் இங்கு மணல் வியாபாரம் நடைபெறுகின்றது, இதற்கு அதிகாரிகளது அதிகாரம் வழங்கப்பட்டதா? விற்காதே விற்காதே வெளி மாவட்டங்களுக்கு தாய் மண்ணை விற்காதே,அதிக பணம் பெறுவதற்காக சொந்தபந்தங்களே விற்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர்.
இவ் மண் அகழ்வைத் தடுக்குமாறு பலதடவை அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்னும் அதனைத் தடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை எனவும் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளரிடம் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கவேண்டாம் எனக் கேட்டபோது மேல் இடத்தில் இருந்துவந்த கட்டளையால்தான் அனுமதி வழங்குவதாக பிரதேச செயலாளர் தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்
அதே வேளை பிரதேச செயலாளருக்கு மேல் இடத்தில் இருந்து கட்டளையிட்டு மக்களையும் அப்பிரதேசத்தையும் சீரழிப்பதற்கு முயற்சிப்பவர் யார் எனவும் மக்கள் கேள்வி எழுப்பினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது அவ் இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று தவிசாளர் யோகநாதன் ரஜனி கருத்துத் தெரிவிக்கையில் மக்களையும் இப்பிரதேச வளசா.ங்களையும் பாதுகாப்பதற்காக அனுமதிவழங்குவதனைத் தடுத்து நிறுத்தவேண்டும். இவ் விடயம் தொடர்பாக பலதடவை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் தெரிவித்து இருக்கின்றேன். இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை மணல் ஏற்றி வரும் வீதியால் செல்லமுடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது பாடசாலை மாணவர்கள் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வீதியால் பாரிய சிரமத்தின் மத்தியில் பயணம் செய்கின்றனர் மண் அகழ்வு இடம்பெறுவதனால் மூங்கிலாற்றுக்கு அருகில் இருக்கும் நெல் வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயத்திற்கு நீர்பாய்ச்சும் அணைக்கட்டு உடைப்பெடுத்து நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனைக் கருத்தில் கொண்டு மணல் அகழ்வைத்தடுத்து அதற்கான அனுமதிகளையும் அதிகாரிகள் தடைசெய்யவேண்டும் எனத் தெரிவித்தார்

Related posts