மாநகரசபைக்குட்பட்ட புறநகர் பிரதேச வீதி அபிவிருத்திகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் 53.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றம் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக கம்பெரலிய திட்டத்தின் மூலம் 53.5 மில்லியன்கள் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு மாநகரசபையினுடாக அவ் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 20வது அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் மாநகரசபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளின் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக மாநகரசபை வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோள்களின் பிரகாரம் 14 வீதிகளுக்கு 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை செய்துள்ளார். இதன்படி அவ்வீதிகளின் அபிவிருத்தி வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் மூலம் மாநகரசபைக்குட்பட்ட 19 வீதிகளின் அபிவிருத்திகளுக்காக 26.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

Related posts