மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு தோரணத்தில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றம்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 20வது பொது அமர்வு… மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு தோரணத்தில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றம்…

மட்டக்களப்பு மாநகரசபையின் 20வது பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு முன்மொழிவுகள், உறுப்பினர்களின் தனிநபர் பிரேரணைகள் என்பன முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநகர முதல்வரின் முயற்சியின் பலனாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் மூலம் நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக 1800 மில்லியன் பெறுமதியான 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் 04 வருட கால வரையறைத் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தனதுரையின் போது தெரிவித்தார்.

அத்துடன், காணி மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பில் மக்களுக்கான துரித சேவையினை வழங்கும் முமகமான ஒரு நாள் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தகு ஒரு நாள் சேவையினைப் பெற விரும்பும் மக்கள் மேலதிக கட்டணமாக 1000 ரூபாயினைச் செலுத்தி இச்சேவையினைப் பெற முடியும். எதிர்வரும் காலத்தில் இவ் ஒரு நாள் திட்டம் வீட்டு வரைபட விடயத்திலும் கையாளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பெறுவனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பில் நிதிக்குழுவின் சிபாரிசுகள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டது.

இதன் போது சுகாதாரக் குழுவின் சிபாரிசின் போது அக்குழுவின் தலைவரான அசோக் அவர்கள் மாநகரசபை உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகளுக்கான ஒத்துழைப்புகளை நல்குவதில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார். இதற்கு முன்னர் சுகாதாரக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் ஸ்தம்பித நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் திருப்பெருந்துறை கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளைத் தரம்பிரிப்பதற்கான புதிய தளம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மாநகரசபையின் அனைத்து நல்ல விடயங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் திருப்பெருந்துறை கழிவு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு திட்டத்திற்கும் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் மாநகரசபை உறுப்பினர் மா.சண்முகலிங்கம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காணிக் குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் காணி விடயங்கள் தொடர்பிலான விபரங்களை அதிகாரிகள் குழுவின் உறுப்பினர்களுக்கு வழங்க மறுப்பதாகவும், மாநகரசபை அதிகாரிகள் பலருக்கு மாநகர காணிகள் இருப்பதாக தங்களிடம் தகவல்கள் இருப்பதாகவும் அதன் நிமித்தம் அதனை ஊர்ஜிதப்படுத்துவதற்கு சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை எனவும் மாநகரசபை உறுப்பினர் திருமதி சசிகலா தெரிவித்தார்.

அதன் பிற்பாடு மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் அவர்களால் பிளாஸ்எக் கழிவகற்றல் தொடர்பிலான பிரேணையும், மாநகரசபை உறுப்பினர் தவராஜா அவர்களினால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணையும், மாநகரசபைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணைகள் மாநகரசபை உறுப்பினர்களான வே.பூபாளராஜா, கு.காந்தராஜா ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் அரச மொழியாக தமிழ் உபயோகிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் அரச அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என தவராஜா குறிப்பிட்டார் இருப்பினும் மாநகரசபை என்கின்ற ரீதியில் எம்மால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தமிழ்மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதே அடிப்படையில் வியாபார நிலையங்களில் பெயர்ப் பதாதைகளில் தமிழ் மொழி முன்னுரிமைப்படுத்தப்படாமலிருப்பது தொடர்பில் பூபாளராஜா தெரிவிக்கையில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வியாபாரப் பத்திர புனரமைப்பின் போது தமிழ்மொழி முன்னுரிமைப்படுத்தப்படுவது தொடர்பில் உரிய நடைமுறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்து அரச கரும மொழிகள் இல்லாத மொழிகள் பிரயோகிப்பது தொடர்பில் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு தோரணத்தில் உள்ள அராபிய எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் என காந்தராஜா அவர்கள் தெரிவித்தார்.

இவை தொடர்பில் மாநகர முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில் வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்புத் தோரணத்தில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது தொடர்பில் எமது அறிக்கையினை முன்வைப்பபதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகரசபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகக் கடந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மாநகர சபையினால் அமைக்கப்படுகின்ற நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts