முரண்பாட்டிற்கு தீர்க்கமான இடைக்கால கொடுப்பனவை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன லீவுப்போராட்டம்

ஆசிரியர்கள்,அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்க்கமான இடைக்கால கொடுப்பனவை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன லீவுப்போராட்டம் இடம் பெறவுள்ளது.
 

ஆசிரியர்கள்,அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்க்கமான இடைக்கால கொடுப்பனவை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன லீவுப்போராட்டத்திற்கு அதிபர்,ஆசிரியர்கள் தயராகும்படி இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுகின்றார்கள்.

இவ்விடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் பீ.உதயரூபன் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை(20)கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாட்டை சம்பள சுற்றறிக்கையுடன் வெளியிடுவதற்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.இதன்போது சம்பள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எந்தவொரு கட்சிச்சாயமும் இல்லை.அனைத்து கட்சியிலுமுள்ள ஆசிரிய அதிபர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளத்தை இல்லாமல் செய்து பாரிய சம்பள முரண்பாட்டிற்கு உட்படுத்தி தற்போது 24ஆண்டுகளாகின்றது.2019 மார்ச் 13,செப்ரம்பர் 26,27 திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டமும் அதற்கு சமாந்திரமாக நடைபெற்ற பாரிய போராட்டங்களும் போராட்டத்தின் உச்சநிலையாகும்.அதன் பிரதிபலனாகவே அதிகாரிகள் கண்கள் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் அமைச்சரவை,உபகுழு ஒன்றை உருவாக்கி தனியான சம்பள பரிமாணங்களை கொடுத்து சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் 2019 ஒக்டோபர் 15 எடுக்கப்பட்டது.அதற்கான சுற்றறிக்கையை வடிவமைக்க சம்பள ஆணைக்குழுவுக்கு 2019 ஒக்டோபர் 29 ஆம் திகதி அனுப்பட்டது.இந்தக் காலப்பகுதியில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டது.அதனுடன் சம்பள சுற்றறிக்கையை செய்வதற்கான சம்பள ஆணைக்குழுவின் செயற்பாடும் மௌனித்தது.இது தொடர்பாக 2019 டிசம்பர் 17 அன்று புதிய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் கலந்துரையாடியதற்கமைய ஒரு மாதமாகியும் இதுவரை எந்த முடிவும் இல்லை.எனவே தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகியநிலையில் கல்வி அமைச்சருடன் மீண்டும் கலந்துரையாடலுக்கு ஜனவரி 21 ஆம் திகதி எம்மை அழைத்தனர்.இந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சு இடைக்கால சம்பளத்தை எமக்கு வழங்கும் பட்சத்தில் அரசசேவையில் உள்ள ஏனைய சமாந்தரசேவைகளுடன் பிரச்சனைகள் ஏற்படும்.எனவே ஆசிரிய,அதிபர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றும் வரை தீர்மானிக்கப்பட்ட இடைக்கால சம்பளத்தை இடைக்கால கொடுப்பனவாக கொடுக்க முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

இந்நிலையில் பீ.சி.பெரேரா ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட சம்பள முரண்பாட்டை முழுமையாக தீர்க்க தொழிற்சங்கங்கள் விரும்பத்தை தெரிவித்திருந்தோம்.இதன்படி வழங்குவதாக ஏற்றுக்கொண்ட இடைக்கால கொடுப்பனவு இன்னும் வழங்கவில்லை.இவைகள் முறையாக நடக்காததாலும்,இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிகாரிகள் பதில்கொடுக்காததால்  எதிர்வரும் பெப்ரவரி 26 திகதி அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறைப்போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைக்குமாறும் அன்றையதினம் காலை 9.30 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்னாள் ஒன்று சேருமாறு கோரிக்கை விடுத்தார்.

Related posts