முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றுமாறு நான் எந்த சந்தர்ப்பத்திலும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றுமாறு நான் எந்த சந்தர்ப்பத்திலும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் வழங்கியது ஏன் என்பது தொடர்பாக கிழக்கு ஆளுநர் ஊடக அறிக்கையொன்றினை நேற்று ஊடகங்களில் விடுத்திருந்தார்.
அந்த ஊடகஅறிக்கையில்…
அபாயாப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரு சுமூகமான நிலை வரும்வரை மாகாணக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க முஸ்லிம் ஆசிரியைகளை தற்காலிகமாக இணைப்பதற்கு இடமாற்ற அனுமதியை வழங்கினேனே தவிர, தான் எந்தவொரு ஆசிரியரையும் தன்னிச்சையாக இடமாற்றம் செய்யவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு நீங்கள் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தீர்களா? என வினவியபோது மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பிற்பாடு பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பாக திருகோணமலையில் பலகூட்டங்கள் நடாத்தப்பட்டன.
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இத்தாக்குதல் சம்பவத்தின் பிற்பாடு சில ஆசிரியர்கள் இடமாற்றம் கேட்டு வருகிறார்கள்.
அவர்களை என்ன செய்வது என்று மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்ற முறையில் வினாவெழுப்பினேன். அதனையிட்டு அந்தக்கூட்டத்தில் சிறிதுநேரம் கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது அப்படி ஆசிரியர்கள் இடமாற்றம் கேட்டுவந்தால் அதே வலயத்தின் பிரதான வீதிக்கு அண்மித்ததான பாடசாலைகளில் அந்தந்த வலயகல்விப் பணிப்பாளர்கள் தீர்மானித்து அவர்களை தற்காலிகமாக இணைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் கல்முனையில் நடைபெற்ற வைத்தியசாலை நிகழ்வொன்றில் ஆளுநர் குறிப்பிட்டதாக ஒரு செய்திக்குறிப்பு 13ஆம் திகதி திங்கட்கிழமை தினகரனில் வெளிவந்தது.
வெளிமாவட்டங்களில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாராயிருந்தாலும் தற்காலிகமாக தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை ஆளுநரிடருந்து ஓர் உத்தரவு எனக்கு கிடைத்தது. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றத்தை வழங்குமாறு கேட்டிருந்தார்.
அதன்படி மறுநாள் சில ஆசிரியர்கள் மாகாணக் கல்வித்திணைக்களத்திற்கு வந்தார்கள். ஆனால் அதிபரினதோ வலயக்கல்விப் பணிப்பாளரினதோ அத்தாட்சியில்லாமல் அக் கோரிக்கைக் கடிதம் அமைந்திருந்தன.
எனவே அவர்களிடம் ஒப்பத்தைப் பெற்றுவருமாறு அவர்களிடம் கூறினேன். அவர்கள் ஆளுநரிடம் சென்று முறையிடப் போவதாகக்கூறிச் சென்றனர். நானும் விட்டுவிட்டேன்.
சில மணி நேரத்தில் மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு அறிவுறுத்தினார்.
இடமாற்றம் கேட்டுவந்த ஆசிரியர்கள் தொடர்பாக பக்ஸ் மூலம் அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு தற்காலிகமாக இடமாற்றக் கடிதத்தை வழங்குங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.
அதன்படி பல முஸ்லிம் பெண் ஆசிரியைகளுக்கு வழங்கினேன். அப்படி வழங்கும்போது முஸ்லிம் ஆண் ஆசிரியர்களும் இடமாற்றம்கேட்டு வந்தார்கள். மிகவும் அவசியம் எனக்கருதும் சிலருக்கு வழங்கிவிட்டு ஏனையோரை அனுப்பிவிட்டேன்.
இதன் பின்னரும் ஆளுநர் அலுவலகத்திலிருந்து ஆளுநரின் சிபார்சுடன் ஆண்ஆசிரியர்கள் பலர் வந்தார்கள்.
இதுவியடம் தொடர்பாக நான் மாகாணக் கல்விச் செயலாளருடன் கலந்துரையாடி அவசியம் இடமாற்றம் தேவை எனக்கருதும் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்குவதென்றும் ஏனையோருக்கு வழங்குவதில்லை என்றும் தீர்மானித்தோம்.
அதன்பின்பு இற்றைவரை யாருக்கும் இடமாற்றம் வழங்கவில்லை. அதுமட்டுமல்ல திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வலயத்திலிருந்தும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம்கேட்டும் வந்தார்கள். அதனையும் மறுத்துவிட்டோம்.
மாகாண கல்வித்திணைக்களத்திற்குத் தெரியாமல் காரியாலய ஊழியர்கள் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றிருக்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது.
எனவே இவ்விடமாற்றம் தொடர்பில் உண்மையைக்கூற வேண்டிய பொறுப்பு என்னிடமுள்ளது என்பதால் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்றார்.

Related posts