மொழியால் இணைந்து சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் : தே.கா அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா !!

 
நூருல் ஹுதா உமர் 
 
 
தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வரலாற்று ரீதியாக மிகவும் சினேகமாக வாழ்ந்து வந்தனர். எனினும், அரசியல்வாதிகளே தங்களது சுகபோக அரசியலுக்கான ஆயுதமாக இனக் குரோதங்களையும் ஐயங்களையும் சமூகங்களுக்கிடையில் உண்டுபண்ணினர். இதுவே இந்நாட்டில் இன்று வரை நீடித்து நிலவிக் கொண்டிருக்கும் இன முரண்பாடாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ் பேசும் உறவுகள் பல்வேறான அசௌகரியங்களை தொண்டு தொற்று சந்தித்து வருவதானது மிகவும் துரதிஸ்டமாகும் என தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா தெரிவித்தார்.
 
ஈச்சிலம்பற்று வாழைத்தோட்டப் பிரதேச மக்கள் சந்திப்புக் கூட்டம்  வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா அவர்களது தலைமையில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் பேசுகையில், 
 
எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் இன ஐக்கியமின்மையினை தொடரவிடாது கட்டுப்படுத்துவதே நாட்டின் சுபிட்சத்திற்கு வழிசமைக்கும். எனவே, சிறுபான்மை உறவுகள் தாங்கள் பேசும் தாய் மொழியான தமிழின் கீழ் ஒன்றிணைய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை முதலில் போக்க வேண்டும். இச் செயன்முறையே நாட்டில் நீடித்து நிலவும் சமாதானத்தை ஏற்படுத்தும்.
 
இதற்கான முன்னெடுப்பை அமுலாக்க வேண்டியது அரசியல்வாதிகளதும் கொள்கை வகுப்பாளர்களதும் மிகப்பெரும் கடப்பாடாகும் என்பதனை தான் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் இதனை வலிதாக்கக்கூடிய வகையில் திறந்த நிலை கலந்துரையாடலை தனது அரசியல் அதிகார காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன்.
 
இதேபோல, தமிழ்ச் சொந்தங்களின் உணர்வுகளை தான் நன்கு புரிந்துள்ளதனால் எதிர்காலத்தில் தமிழ் உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவேன் என்பதனை தமிழ் மக்கள் உறுதியாக நம்ப முடியும்.
திருமலை மாவட்ட அரசியல் பயணத்தில் தேசிய காங்கிரசின் பயணம் தூய்மையாக இருக்கும் .அனைவரும் எமது ஒற்றுமையான பயணத்தில் கைகோர்ப்போம் என்றார். 
 
 
இந்நிகழ்வில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் வைத்தியர் வை.எஸ்.எம்..ஸியா அவர்களினுடாக தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். இச்சந்திப்பில் கோயில் பரிபாலன சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை வேட்பாளர்கள், தேசிய காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பொருளாளர் எஸ்.நபீர்,முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரியும் திருகோணமலை மாவட்ட சிறிலங்கா சிரேஸ்ட பிரஜைகளின் ஒன்றிய அமைப்பாளர் எஸ்.எம். ஐமால்தீன், பொதுமக்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என பல்மட்டத்தினரும் பங்குபற்றியிருந்தனர்.
 

Related posts